(எம்.மனோசித்ரா)

புகையிரத சேவையாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டம் இன்று ஐந்தாவது நாளாகவும் தொடர்கின்றது. சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை முடிவுக்கு கொண்டுவரப் போவதில்லை என புகையிரத ஒழுங்குபடுத்தல் சங்கத்தின் செயளாலர் நிரோஷ பீரிஸ் தெரிவித்தார். 

அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஊடகங்களில் பிரசாரங்களை மேற்கொள்கின்றது. ஆனால் எமது கோரிக்கைகளை நிறைவேற்றி பிரச்சினைகளை தீர்ப்பதில் இது வரையில் அரசாங்கம் நம்பகத்தன்மையை வெளிப்படுத்தவில்லை.

நீண்ட காலமாக எமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளோம். அப்போது அவர்கள் அதனைக் கருத்திற்கொள்ளவில்லை. நியாயமான முறையில் கோரிக்கைகளை வென்றெடுக்க இதற்கு முன்னரும் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். 

கால அவகாசத்தைக் கோரி அரசாங்கம் அப்போது எமக்கு சில உறுதி மொழிகளை வழங்கியது. ஆனால் இன்று வரையில் அந்த உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்கோ எம் மத்தியில் நம்பக தன்மையை ஏற்படுத்துவதற்கோ அரசாங்கம் செயற்படவில்லை. 

மாறாக எமது கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிந்திருந்தும் எவ்விதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை. கடந்த புதன்கிழமை நாடளாவிய ரீதியில் புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்தோம். 

அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே போராட்டத்தை முன்னெடுக்க வேண்டி ஏற்பட்டது. புகையிரத வேலை நிறுத்த போராட்டத்தினால் பொது மக்கள் முகங்கொடுத்த அசௌகரியங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை. 

வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு அரசாங்கம் அழைக்குமேயானால் அதனை நாம் ஏற்க மாட்டோம். 

ஏனெனில் இதற்கு முன்னரும் அரசாங்கம் பேச்சு வார்த்தை என்ற போர்வையில் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்காது காலம் கடத்தும் செயற்பாட்டினையே முன்னெடுத்தது. 

இம் முறை நாங்கள் ஏமாற தயாரில்லை. தீர்வை எட்டுவதற்காக பேச்சுவார்த்தைக்கு வருவோம். ஆனால் வேலை நிறுத்தம் தொடருவோம் என அறிவித்துள்ளார்.