(நா.தினுஷா)

புகையிரத தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக மக்கள் எதிர்கொண்டுள்ள  அசௌகரிங்களை கருத்தில் கொண்டு நாளை முன்னெடுக்கவிருந்த தனியார் பஸ் பணிபகிஷ்கரிப்பை இரத்து செய்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும் எரிப்பொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப பஸ் கட்டணத்தில் விலை அதிகரித்தல் மற்றும் தனியார் மற்றும் அரச பஸ்களுக்கான நேர அட்டவணை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வை எட்ட வேண்டும். இல்லையென்றால் தனியார் பஸ்களும் போராட்டத்தில் குதிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.  

வேலைநிறுத்த போராட்டத்தில்  நாளை ஈடுப்படவுள்ளதாக அறிவித்திருந்த நிலையிலேயே தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டேன்லி பெர்னான்டோ கேசரிக்கு இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது , 

எரிப்பொருட்ளின் விலை அதிகரிப்பு, பஸ் கட்டணங்களின் அதிகரிப்பு காரணமாக தனியார் பஸ் போக்குவாரத்தில் ஏற்ப்பட்டுள்ள பிரச்சினைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை அரசாங்கத்திடம்  முன்வைக்கப்பட்டிருந்தது.  ஆனால் கோரிக்கைகளுக்கான நிரந்தர தீர்வுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. 

இந்நிலையிலேயே நாளை எமது சங்கம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட போவதாக அறிவித்திருந்தது. எவ்வாறாக இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை போக்குவாரத்து அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. கலந்துரையாடலின் பின்னர்  வேலைநிறுத்த போராட்டமானது கைவிடப்பட்டுள்ளது. 

கடந்த நான்கு நாட்களாக புகையிரத தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தினால் பொது மக்கள் பெரிதும் அசௌகரியத்தை எதிர்க்கொண்டு வருகின்றனர். அத்தோடு இந்த காலப்பகுதியில் உயர்தர பரீட்சைகளும் நடைப்பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே வேலைநிறுத்த போராட்டத்திற்கான தீர்மானம் இரத்து செய்யப்பட்டுள்ளது.  

கடந்த சில மாதங்களாக எரிபொருகளின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது. எரிப்பொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து பஸ் கட்டணங்களும் அதிகரித்திருந்ததனால் பஸ்கள் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதுடன் பல்வேறான தொழில்சார் பிரச்சினைகளும் எழுந்துள்ளன. இதற்கான தீர்வினை அரசாங்கம் விரைவாக பெற்றுக்கொடுக்க வேண்டும். 

அத்துடன் தனியார் பஸ் சேவைகள் வழமைபோல் இயங்குவதுடன் மேலதிக பஸ்களும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.