21 மில்லியன் ரூபா பெறுமதியான 70 ஆயிரம் போதை மாத்திரைகளைக் கடத்திய இளம் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மன்னாரிலிருந்து கொழும்புக்கு கடத்திச் சென்ற வேளையில் செட்டிக்குளம் பகுதியில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், போதை மாத்திரைகளும் காரும் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் ஆலோசனையில் வவுனியா மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு பொலிஸ் பிரிவு, செட்டிக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வீதிச் சோதனை நடவடிக்கை முன்னெடுத்திருந்தது.

அதிகாலை 4.30 மணியளவில் சிறிய ரக காரை மறித்து சோதனையிட்ட போது, அதற்குள் பெருமளவு போதை மாத்திரைகள் உள்ளமை கண்டறியப்பட்டது.

அதில் பயணித்த 24 வயதுடைய குடும்பத்தலைவரும் 18 வயதுடைய அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் களணியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு, போதைப் பொருள் கடத்தும் பாதாள கும்பலுடன் தொடர்பு உள்ளது.

மது, குணா என்ற முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரர்களால் டுபாயிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட 70 ஆயிரம் போதை மாத்திரைகள் மன்னாருக்கு கடல் வழியாக வந்துள்ளன.

அவற்றை கொழும்புக்கு கடத்திச் செல்லும் போதே இந்த கைது இடம்பெற்றது.

வலி நிவாரண மாத்திரையான இது 50 மில்லி கிராம் அளவே மருத்துவரின் அனுமதியுடன் வழங்க முடியும். ஆனால் கைப்பற்றப்பட்ட 70 ஆயிரம் மாத்திரைகளும் 200 மில்லிக்கிராம் அளவுடையவை.

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கே அவற்றைக் கடத்திச் சென்றதாக சந்தேகநபர்கள் தெரிவித்தனர்.

அத்துடன், இதே மாத்திரைகள் வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் விசாரணைகளின் மூலம் தகவல் கடைத்துள்ளன” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.