கனடாவின் நியுபிரன்ஸ்விக்கின் பிரெடெரிக்டன் நகரில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரு பொலிஸார் உட்பட நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸார் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் இருவரை இது தொடர்பில் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் எந்த சூழ்நிலையில் இடம்பெற்றது என்ற விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிவித்துள்ள பொலிஸார் சமூக ஊடகங்களை தகவல்களை பரிமாறுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அதிகாலை 7 மணிக்கு முதலில் மூன்று துப்பாக்கிபிரயோக சத்தம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சுமார் 15 துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்மாடியொன்றிலிருந்து துப்பாக்கி சத்தம் வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸார் ஒரு குடிமனைப்பகுதியிலேயே கவனம் செலுத்திவருகின்றனர் அங்கிருந்து நான்கைந்து துப்பாக்கி சத்தங்கள் கேட்டன என ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கனடா பிரதமரும் மோசமான செய்திகள் பிரெடெரிக்டன் நகரிலிருந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

இதேவேளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்களை தற்போதைக்கு வெளியிடவிரும்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்