மே- 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான திருமுருகன் காந்தி தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 03.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாகக் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிச் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக நடைபெற்றது.

இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானருமான செல்வராஜா கஜேந்திரன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் திலீசன், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், அடக்கு முறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன், வடமராட்சி கிழக்குப் பிரஜைகள் குழுவின் செயலாளர் சி.த. காண்டீபன் மற்றும் கட்சியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன், கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “தமிழக அரசே! ஈழ ஆதரவாளர்களை நசுக்காதே”, விடுதலை செய்! விடுதலை செய்! திருமுருகன் காந்தியை விடுதலை செய்!”, “தமிழக அரசே குண்டர் சட்டத்தை ஏவாதே” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் பல்வேறு பதாதைகளைத் தமது கைகளில் தாங்கியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.