(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

ரயில் சாரதிகளின் சம்பள அதிகரிப்புத் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்படவில்லை. பொய்யான பிரச்சினையை ஏற்படுத்தி நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கு எதிரணியினர் முயற்சிக்கின்றனர் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கூட்டு எதிர்க்கட்சியினர் புகையிரத சாரதிகளின் வேலைநிறுத்தம் தொடர்பாக சபையின் அவதானத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரயில் சாரதிகள் உள்ளிட்ட சகல அரச பணியாளர்களின் சம்பள மறுசீரமைப்புத் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான பொறுப்பை குழுவொன்றிடம் பொறுப்பளித்துள்ளோம். இந்தக் குழுவின் ஊடாக கலந்துரையாடல் நடத்தப்படும். 

இவ்வாறான நிலையில் பொய்யான பிரச்சினையை ஏற்படுத்தி குழப்பம் விளைவிக்கின்றனர். ரயில் சாரதி ஒருவர் மாதமொன்றுக்கு 2 இலட்சம் ரூபா சம்பளம் பெறுகின்றார். இதனைவிட 500 மணித்தியாலங்கள் மேலதிக நேரக் கொடுப்பனவைப் பெற்றுக் கொள்கின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களைவிட இவர்களிம் சம்பளம் அதிகம். 

இவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பற்றிக் கூட சிந்திக்காது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் குழப்பமடைந்த ரயில் பயணிகள் ரயில் சாரதி ஒருவரை பிடித்துவைத்திருந்த நிலையில் அரசாங்கமே தலையிட்டு அவர்களை மீட்க வேண்டியிருந்தது என்றார்.