நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மார்டின் குரோவ் தனது 53 ஆவது வயதில் காலமானார்.

அண்மைக்காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த மார்டின் குரோவ் இன்று அதிகாலை அவரது பிறந்த ஊரான ஆக்லாந்தில் மரணமானார்.

நியூசிலாந்து அணிக்காக விளையாடிய மார்டின் குரோவ் 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5,444 ஓட்டங்களையும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4,704 ஓட்டங்களையும்  பெற்றுக்கொடுத்துள்ளார்.

பந்து வீச்சில் 77 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 14 விக்கெட்டுகளையும் 143 ஒருநாள் போட்டிகளில் பங்குபற்றி  29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

மார்டின் குரோவ் 16 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை வகித்துள்ளதுடன் 1991 ஆம் ஆண்டு வெலிங்டனில் இலங்கை அணிக்கு எதிராக 299 ஓட்டங்களைப் பெற்றமையே அவரது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.