அறுபது வயதைக் கடந்தவர்களை முதுமை பருவத்தினர் என்று குறிப்பிடுகிறோம். இவர்களின் ஆரோக்கியத்தை கண்காணித்து பராமரிப்பது சவாலானதாக இருக்கிறது. இதன் காரணமாகவே தற்போது மருத்துவ துறையில் ஜெரியாட்ரிக்ஸ் என்ற முதியோர் நலம் குறித்த பிரிவு தனியாக வளர்ந்து வருகிறது. 

இன்றைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலானவர்கள் தங்களின் பெற்றோர்களை உடனிருந்து கவனித்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் கணவன் மனைவி என இரண்டு பேரும் வேலைக்கு சென்று சம்பாதித்தால் தான் குடும்பத்தை பொருளாதார சுமையில்லாமல் நகர்த்த முடியும் என்பதால் பணிக்கு செல்கிறார்கள். இந்நிலையில் தங்களுடைய வீட்டில் இருக்கும் வயதானவர்களை பாதுகாக்க அவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க வைத்தியரின் உதவியை கோருகிறார்கள்.

முதியவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், புற்றுநோய், தைரொய்ட், இரத்த சோகை, பித்தப்பை கற்கள், புரொஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்ற பிரச்சினைகளால் தான் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

வயது அதிகரிக்க அதிகரிக்க பசியும், ருசியும் குறையும். அதனால் அதிகசத்துள்ள உணவுப்பொருள்களை சீரான இடைவெளியில் போதிய அளவிற்கு உணவு உட்கொள்ளவேண்டும். வைத்தியர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு நாளாந்தம் தண்ணீர் அருந்தவேண்டும். எண்ணெய், உப்பு ஆகியவற்றை தவிர்க்கவேண்டும். தினமும் நடைபயிற்சியை குறைந்த நேரத்திற்காவது செய்யவேண்டும். மரணம் குறித்த அச்சத்தை அகற்றுவதற்கான பயிற்சியில் ஈடுபடவேண்டும். மரணபயத்தை அனுமதிக்ககூடாது.  இதையெல்லாம் பின்பற்றினால் முதுமையில் மரணத்தைப் பற்றிய பயம்இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.