(இராஜதுரை ஹஷான்)

பாராளுமன்றத்திற்குள் நெருக்கடிகளும், குழப்பங்களும்  விளைவித்துக் கொண்டு  அரசாங்கத்தின் நல்ல திட்டங்களின்  பயன்கள் மக்களை  சென்றடையாதவாறு தடுத்துக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கட்சியினராக செயற்பட முடியாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்  70 பேர்  காணப்படுகின்றமையால் அவர்களால் எதிர்கட்சி தலைவர் பதவியை கோரமுடியாது. பொது எதிரணியில் அங்கம் வகிப்பவர்கள் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர்களாகவே பொது தேர்தலில் போட்டியிட்டு  தெரிவானவர்கள் . அரசாங்கத்தில் இருந்து விலகினாலும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியில் இருந்து விலகியதாக அறிவிக்கவில்லை. இதனால் இவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்க முடியாது.

2015 ஆம் ஆண்டு பொது தேர்தலில் தமிழ்த்  தேசிய கூட்டமைப்பிற்கு அதிகபடியான ஆசனங்கள் கிடைக்கப் பெற்றது  இதன் காரணமாகவே எதிர்கட்சி தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டார்.   இவர்கள் இன்று பாராளுமன்றத்தில்  சிறந்த எதிர்கட்சியினராகவே செயற்படுகின்றனர் பல நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.   

இவ்வாறு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள் என்ற காரணத்தினால்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எமது பங்காளிகள் அல்ல  அவர்கள் சிறந்த எதிர்கட்சியினரே. 

இப்பதவியை போராட்டங்களின் ஊடாக பொது   எதிரணியினர் ஒரு போதும் பெற முடியாது. பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு கட்டுப்பட்டு செயற்பட வேண்டும் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகரது தீர்மானத்திற்கு அரசாங்கத்தின்  உறுப்பினர்கள்  என்ற வகையில் நாங்கள் கட்டுப்படுவோம் என்றார்.