(எம்.சி. நஜிமுதீன்)

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து பலதரப்பட்ட கருத்து முன்வைக்கப்படுகின்ற போதிலும் தற்போதைக்கு அவ்வதிகரிப்பு இல்லையென்பதை ஜனாதிபதி, பிரதமர் உட்பட ஆளுங்கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர். மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்படவுமில்லையென இணை அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு அமைவாக உயர்நீதிமன்றின் நீதியரசர்களின் சம்பள அதிகரிப்புக்கு நிகராக பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்  என்கின்ற தீர்மானம் உள்ளது. எனினும் கடந்த காலங்களில் அது நடைமுறைக்கு வரவில்லை. இருந்தபோதிலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

ஆயினும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் தொடர்பில் தற்போது தெளிவான அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, சம்பள அதிகரிப்புக்கு இடமளிக்கப்போதவில்லை எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுகம் அவ்வாறான யோசனை ஒன்று முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார். நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கும் தேவையில்லை என அறிவித்துள்ளார்.

அத்துடன் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பளத்தை அதிகரிக்க தேவையில்லையென ஏகமானதாகத் தீர்மானித்துள்ளனர். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்படவுமில்லை என்றார்.