(நா.தனுஜா)

இலங்கையின் 2018ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி இலக்காகிய 17.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாகப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்தார். 

கொழும்பில் நடைபெற்ற மெஸ்சே பிராங்பர்ட் கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த இந்திரா, இவ்வாண்டிற்கான ஏற்றுமதி இலக்கில் 60சதவீதமானவை ஜூலை மாத இறுதியில் அடையப்பட்டுள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"அரசாங்கம் ஏற்றுமதி இலக்காக 2019ஆம் ஆண்டில் 20 பில்லியன் அமெரிக்க டொலரையும், 2020ஆம் ஆண்டில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் அடைந்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளது. இதனை அடைவதற்கு அவசியமான நடவடிக்கைகள் தற்போது செயல் வடிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்தோடு இலங்கை தற்போது பொருட்கள் வடிவிலான ஏற்றுமதியிலிருந்து சேவை ரீதியான ஏற்றுமதிக்கு நிலைமாற்றம் அடைந்து வருகின்றன. இன்னும் இரு வருடங்களில் சேவை ஏற்றுமதிகள் விரிவடையும் என உறுதியாகக் கூறமுடியும். 

மேலும் சேவைத்துறையில் தகவல் தொழில்நுட்பம் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது, ஆகையினால் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் சேவை ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கு உதவியாக அமையும். இந்த நாட்டிலே யுத்தத்தை முறியடிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டது போன்று பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். 

ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பனவே தற்போது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு அவசியமான முக்கிய தூண்களாக உள்ளன. அதேபோன்று இலங்கை மற்றும் சீனாவுக்கிடையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் இலங்கையில் சீன முதலீட்டாளர்களின் அளவு அதிகரிக்கும். 

அது மாத்திரமன்றி சீனர்கள் இலங்கையில் உற்பத்தியை மேற்கொண்டு அதனை வரிகளின்றி சீனாவிற்கு மீள் எற்றுமதி செய்தல் இலகுபடுத்தப்படும். மேலும் இலங்கையில் உற்பத்திகளை முற்கொள்ளும் சீன முதலீட்டாளர்கள் இந்திய - இலங்கை சுத்நதிர வர்தத்க ஒப்பந்தத்தின் மூலமான அனுகூலங்களைப் பெறமுடியும். அதன்மூலம் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானிற்கும் ஏற்றுமதிகளை மேற்கொள்ளலாம்." என்றார்.