(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களையும் மீண்டும் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் செய்து கொடுக்க தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், யுத்தத்தின் போது நாட்டை விட்டு வெளியேறிய அகதிகள் குறித்து பிரதமரிடத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில்,

 

நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இலங்கை மக்கள் இலங்கையில் சுதந்தரமாக வாழ வேண்டும். ஆகவே யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய சகல இலங்கையர்களும் மீண்டும் இலங்கைக்கு வரவேண்டும். இதற்காக அரசாங்கமாக நாம் அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். 

நாட்டுக்கு திரும்பி வரும் மக்களுக்கு சகல உதவிகளையும் வாழ்வாதார நடவடிக்கைகளையும் செய்துகொடுக்க நாம் தயாராக உள்ளோம். அதேபோல் அகதிகளாக வெளியேறி இப்போது நாடு திரும்பியுள்ள மக்களின் நிலைமைகள் குறித்தும் நாம் ஆராய்ந்து அவர்களுக்கான அடுத்த கட்ட உதவிகளை செய்து கொடுப்பது குறித்தும் நாம் துரித நடவடிக்கைகளை முன்னெடுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.