ஐந்து முறை தமிழக முதல்வர், பதிமூன்று முறை சட்டமன்ற உறுப்பினர், ஐம்பது ஆண்டு காலம் தி.மு.க. தலைவர் என அரசியல் தளத்தில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தகாரரான கலைஞர் மு. கருணாநிதியின் மறைவிற்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்தும் ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் வருகை தந்து அஞ்சலி செலுத்தினர். 

சோனியா காந்தி

கருணாநிதியின் மறைவு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் போன்ற ராஜதந்திரியை பார்க்கமுடியாது, இந்திய அளவிலும், தமிழக அளவிலும் கருணாநிதி பெரிய தலைவர், சமத்துவம், சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். தந்தையைப் போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு என ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் தன்னுடைய இரங்கற் செய்தியை தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி

‘தன்னிகரற்ற தலைவரும், பழுத்த நிர்வாகியும், மக்கள் நலனுக்காகவும், சமூக நீதிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தலைவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தினேன்.கலைஞர் கருணாநிதியால் தங்கள் வாழ்க்கையில் மாற்றம் கண்ட கோடானுகோடி மக்களின் எண்ணங்களிலும்,  இதயங்களிலும் அவர் வாழ்வார். ’ என்று டுவீட்டரில் தெரிவித்திருக்கிறார்.

மம்தா பானர்ஜி, முதல்வர் மேற்கு வங்காளம்,

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மெரீனாவில் இடமில்லை என நேற்று வெளியான தகவலால் கவலையடைந்தேன். கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் ஒதுக்குவது குறித்து பிரதமரிடம் பேசினேன். முதல் அமைச்சரை தொடர்பு கொண்டபோது தகவல் கிடைக்கவில்லை. அரசியலில் மூத்த தலைவர், அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு, மெரீனாவில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்படும் என்ற தற்போதைய அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

நிதிஷ்குமார், முதல்வர் பீகார்,

இந்தியாவின் முதுபெரும் தலைவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு ஆழ்ந்த இரங்கை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது மறைவையொட்டி பீகாரில் இரண்டு நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.

இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ்,  டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கேரள மாநில முதல்வர் பிரனயி விஜயன்,  கேரள மாநில ஆளுநர் சதாசிவம், உத்திரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் கருணாநிதியின் உடலுக்கு நேரில் வருகைத்தந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.