என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம் கடிதம் மூலமாக கோரிக்கையொன்றை முன்வைக்கப் போகின்றேன் என வடமாகாண மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். 

மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் வெளியிட்ட கருத்தானது தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஆபத்து என்றும் இவ் விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் அனந்தி சசிதரன் சாவகச்சேரரி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.

இந் நிலையில் இது தொடர்பாக இன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன் பொலிஸாருடனான சந்திப்பின் பின் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

1987 ஆம் ஆண்டு மாகாணசபைச் சட்டத்தின் பிரகாரம் சபையில் நடக்கும் விவகாரங்களுக்கு பொலிஸாரோ நீதிமன்றமோ நடவடிக்கை எடுக்க முடியாது என்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை அவைத் தலைவர் பொலிஸாரிடம் வழங்கியுள்ளார். இதன் பிரகாரம் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாது என்று சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

நான் நினைக்கின்றேன் அவைத்தலைவர் என்னிடம் ஆயுதம் இருக்கின்றாதா? இல்லையா? என்பதை உறுதிப்படுத்த ஒரு கோரிக்கையினை சாவகச்சேரி பொலிஸாரிடம் முன்வைப்பாராக இருந்தால் அது தொடர்பான விசாரணைகளை அவர்கள் செய்யத் தயாராக இருப்பார்கள். 

எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக என்னிடம் ஆயுதம் இருக்கின்றதா? அல்லது இல்லையா? என்பதை சாவகச்சேரி பொலிஸாரினூடாக தகவல்களை பெற்று சபைக்கு சமர்ப்பிக்குமாறு நான் அவைத் தலைவரிடம் கடிதம் மூலமாக கோரிக்கையொன்றை முன்வைக்கப் போகின்றேன் என்றார்.