வவுனியாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள பண்டாரவன்னியனின் 215 ஆவது வெற்றி விழா நிகழ்வில் கலைஞர்களின் கருத்து சுதந்திரத்திற்கு நகரசபை உறுப்பினர்கள் தடை போட முயல்வது கண்டிக்கத்தக்கது என கலைஞர்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.


பண்டாரவன்னியனின் வெற்றி நாள் ஏற்பாடுகள் தொடர்பில் பொது அமைப்புக்களுடனான சந்திப்பு ஓன்று நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் திங்கள் கிழமை இடம்பெற்றிருந்தது.


இதன்போது கலைஞர்கள் கவியரங்கம் செய்யும் போது அரசியல் கட்சிகளை விமர்சனம் செய்யக்கூடாது எனவும், கவியரங்கில் பயன்படுத்தும் கவிதையை முற்கூட்டியே நகரசபை தலைவரிடம் காட்டி அனுமதி பெற வேண்டும் எனவும் கூட்டமைப்பின் நகரசபை உறுப்பினர்களான ந. சேனாதிராஜா மற்றும் சு.காண்டீபன் ஆகியோர் தெரிவித்திருந்தனர். 


இந்தக் கருத்தானது எமது கருத்து சுதந்திரத்திற்கு தடை போடும் செயற்பாடு என்பதுடன் கலைஞர்களை அவமதிக்கும் செயற்பாடு ஆகும். கலைஞர்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும். எமது மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களே கருத்து சுதந்திரத்திற்கு தடை போட்டு குரல்வளையை நசுக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குறித்த இரு நகரசபை உறுப்பினர்களும் தமது கருத்துக்களை மீளப்பெற வேண்டும் எனவும் கலைஞர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.