(இரோஷா வேலு) 

வெல்லம்பிட்டிய - சேதவத்தை கருப்பு பாலம் எனப்படும் பாலத்தின் அடியில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய மூவரை இராஜகிரிய புலனாய்வுத் துறை பொலிஸார் கைது செய்து இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவத்தின் போது வாதுவ, மருதானை மற்றும் ரிதிகம பிரதேசங்களைச் சேர்ந்த 30, 36 மற்றும் 29 வயதுகளையுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருப்பு பாலத்தின் அடியில் போதைப்பொருட்கள் கைமாற்றப்படுவதாக இராஜகிரிய புலனாய்வுத் துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலின் போது பாலத்தின் அடியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூவர் சுற்றிவளைக்கப்பட்டனர். 

இவ்வாறு இவர்களை சுற்றிவளைத்த வேளையில் அவர்களிடம் காணப்பட்ட பயணப்பையிலிருந்து 10கிலோ 200 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த மூவரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜகிரிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.