நிதி மோசடி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளின் கீழ் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1எம்.டி.பி விவகாரம் தொடர்பில் மேலும் புதிய 3குற்றச்சாட்டுகளுக்கெதிராக நஜீப் ரஸாக்கிற்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று காலை கோலாலம்பூர் நீதி மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே நீதி மன்றில் 4 குற்றச்சாட்டுகளை எதிர் நோக்கியுள்ள நஜீப் ரஸாக்கிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் புதிய குற்றச்சாட்டுகள் எஸ்.ஆர்.சி சர்வதேச நிறுவனத்தோடு தொடர்புடைய பணப் பரிமாற்றத்தோடு சம்பந்தப்பட்டவையாகும்.

கள்ளப் பணப்பரிமாற்றம், பயங்கரவாதம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் பணம் பெறும் சட்டம் ஆகியவை தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையம் சுமத்தியுள்ள 3 புதிய வழக்குகளையே ஜாலான் டூத்தாவில் உள்ள நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

முன்னைய 4 குற்றச்சாட்டுகளைப் போலவே புதிய 3 குற்றச்சாட்டுகளும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு ஒரே நீதிபதியின் கீழ் ஒன்றாக விசாரிக்கப்படும்.

இப் புதிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ரஸாக்கிற்கு 5 மில்லியன் ரிங்கிட் அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும்  சேர்த்து விதிக்கப்படலாம் என அரசதரப்பு வழக்கறிஞர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.