புத்தளத்திலிருந்து முல்லைத்தீவிற்கு மீன் வியாபாரம் மேற்கொள்ளும் நபர் ஒருவரின் தவறிய பணப் பையை ஒப்படைத்த போக்கு வரத்துப் பொலிஸார்.

புத்தளத்திலிருந்து முல்லைத்தீவிற்கு மீன் வியாபாரம் மேற்கொள்ளும் நபர் ஒருவரின் பண பை நேற்று இரவு வவுனியாவில் தவறியுள்ளது. இதையடுத்து 35,640 ரூபா அப்பணத்தை கடமை முடிந்து சென்ற போக்குவரத்துப் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு கண்டெடுத்து அதை போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

 பணம் தவறவிட்ட குறித்த மீன் வியாபாரியை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து தவறவிடப்பட்ட பணத்தினையும் ஆவணங்களையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு புத்தளம் செல்வபுரம் பகுதியிலிருந்து முல்லைத்தீவிற்குச் சென்று அங்கிருந்து மீன் வியாபார நடவடிக்கை மேற்கொண்டுவரும் நபர் ஒருவர் நேற்று இரவு வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு விட்டு தனது பண பையை வாகனத்தின் முன் டாஸ்போட்டில் வைத்துவிட்டு வாகனத்தைச் செலுத்திக்கொண்டு முல்லைத்தீவு நோக்கிச் சென்றுள்ளார்.

இதன்போது வவுனியா பிரதான மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் பணப்பை தவறியுள்ளது. இது புரியாமல் தனது வாகனத்தைச் செலுத்திச் சென்றபோது புதிய பஸ் நிலையப்பகுதியிலுள்ள போக்குவரத்துப் பொலிஸார் தமது சோதனை நடவடிக்கையின்போது வழிமறித்தபோது பணப்பை தவறியுள்ளது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து பொலிஸாருடன் இணைந்து தனது பணப்பையைத் தேடியலைந்தபோதிலும் பணப்பை ஏனைய ஆவணங்கள் எவையும் கிடைக்கவில்லை இதையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுவிட்டு  சென்றுள்ளார்.

நேற்று காலை பணத்தை தவறவிட்ட மீன் வியாபாரிக்கு தகவல் வழங்கப்பட்டு வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரி தலைமையில் போக்குவரத்து உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.ஜ.திஸாநாயக்க மற்றும் இரவுக்கடமையிலிருந்து பணப்பையினை ஒப்படைத்த திசாநாயக்க (41869), அஜித்குமார் (45213) ஆகிய இருவர் முன்னிலையில் மீன் வியாபாரியிடம் பணப்பை வழங்கிவைக்கப்பட்டது.

குறித்த பணம் நகை அடைவு வைத்து அப்பணத்தில் மீன் வியாபாரம் மேற்கொள்வதற்காக எடுத்துவரப்பட்டுள்ளதாக மீன் வியாபாரி தெரிவித்தார்.