முல்­லைத்­தீவு நீதி­மன்ற சிறைக்­கூ­டத்­தி­லி­ருந்து நான்கு கைதிகள் தப்பியோடி­யுள்­ள­தாக முல்­லைத்­தீவு பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

முல்­லைத்­தீவு, செல்­வ­புரம் பகு­தியில் கடந்த 23.05.2018 அன்று இளைஞர் ஒரு­வரை கொலை செய்த குற்­றச்­சாட்டின் பேரில் சுன்­னா­கத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 31.05.2018 அன்று முல்­லைத்­தீவு பொலி­ஸாரால் கைது­செய்­யப்­பட்டு சிறையில் அடைக்­கப்­பட்­டி­ருந்தார். இந்­நி­லையில் குறித்த நபர் விசா­ர­ணைக்­காக நேற்று முல்­லைத்­தீவு நீதி­மன்­றத்­துக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டி­ருந்தார்.

அத்­துடன் கடந்த 27.06.2018 அன்று முல்­லைத்­தீவு நகர் மற்றும் கள்­ளப்­பாடு உள்­ளிட்ட பகு­தி­களில் கொள்ளைச் சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தில் 7 பேர் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அதில் 3 பேர் நேற்று விசா­ர­ணைக்­காக  நீதி­மன்­றத்­துக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டி­ருந்தனர்.

இந்­நி­லையில் குறித்த நால்­வரும் விசா­ர­ணைக்­காக நீதி­மன்ற சிறைக்­கூ­டத்தில் அடைக்­கப்­பட்­டி­ருந்த வேளை நீதி­மன்ற சிறைச்­சாலை பொலி­ஸா­ருக்கு தெரியாத வகையில் தப்பியோடியுள்ளனர். இவர்களைத் தேடும் பணியில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.