முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறாவது நாளாகவும் இடம்பெற்று வரும் கடற்றொழிலாளர்களின் போராட்டத்தை வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நேரடியாக சென்று பார்வையிட்டதுடன் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமான தொழிலை நிறுத்த கோரி மீனவர்கள் ஆறாவது நாளாக போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள். இந் நிலையிவேயே இன்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், வட மாகாண மீன்பிடி மற்றும் விவசாய அமைச்சர் க.சிவநேசன், வட மாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் நேரடியாக சென்று நிலைமைகளை பார்வையிட்டனர்.

இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விக்னேஸ்வரன்,

சட்டவிரோத தொழில்கள் சம்மந்தமாக என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று அறிந்து கொள்வதற்காக முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களை சந்தித்து பேசியுள்ளேன் இதுவரை ஒரு மணிநேரம் அவர்களின் பிரச்சனைகளை கேட்டுக்கொண்டேன் அதில் இருந்து நான் அறிந்து கொண்ட சில விடயங்கள் வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களால் இவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன .

ஆகவே வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்களை என்னவிதத்தில் தடைசெய்யலாம் என்பதை நாங்கள் அரசாங்கத்துடன் பேசி தீர்மானிக்க வேண்டும்.

அத்துடன் வடமாகாண மீன்பிடி திணைக்களத்தின் உத்தியோகபூர்வமான அலவலகம் இங்கு இல்லாதது பெரும் சிரமத்தை தந்துள்ளதாகவும் மீனவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அது சம்மந்தமாக நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.