(இராஜதுரை ஹஷான்)

தேசிய அரசாங்கத்தில் ஜனநாயகம் இல்லை என்று  குற்றம் சுமத்துபவர்கள் கடந்த அரசாங்கத்தில் ஜனநாயகம் எவ்வாறு  காணப்பட்டது என்ற உண்மைகளை மக்களுக்கு எடுத்துரைக்க முடியுமா? என மின்வலு புத்தாக்க பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஊழல்வாதிகளை சட்டத்தின்முன் நிறுத்தி  தண்டனை பெற்றுத் தருவதாக குறிப்பிட்டே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஜனாதிபதி  தேர்தல்,  பாராளுமன்ற தேர்தல்களில் இதுவே எமது கொள்கை பிரச்சாரமாக காணப்பட்டது. மக்களும் இவ்விடயத்தை எதிர்பார்த்தே தேசிய அரசாங்கத்தை தோற்றுவித்தனர். ஆனால் தற்போது அரசாங்கத்தின் நோக்கம் திசைமாறிவிட்டதாக குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் எமது ஆட்சியில் ஜனநாயகம்  அழிக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டுபவர்கள் கடந்த அரசாங்கத்தில் எவ்வாறான ஜனநாயகம் காணப்பட்டது என்று  பகிரங்கமாக ஒப்பிட முடியுமா?

ஜனநாயகத்தை பாதுகாக்கும் அனைத்து  தாபனங்களும் இன்று சுயாதீனமாகவே செயற்படுகின்றது ஊழல்வாதிகளை தண்டிப்பதாக  கூறிய அரசாங்கம் ஏன் இன்னும் அவ்வாறு செயற்படவில்லை என்று மக்கள் மத்தியில் உள்ள கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.