மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வட மாகாண அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அமைச்சர்கள் இருவர் வெளிநடப்பு செய்துள்ளனர்.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ. மோகன்தாஸின் ஏற்பாட்டில் இணைத் தலைவர்களான வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் அமைச்சர் பதியுதீன் பிரதி அமைச்சர் கே.கே. மஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இணைத் தலைமையில் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வட மாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் மற்றும் வடக்கு விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் ஆகியோர் மண்டபத்திற்குள் வருகை தந்த போது அவர்களுக்கான ஆசனங்கள் ஒதுக்கப்படவில்லை என்ற காரணத்தினால் குறித்த இரு அமைச்சர்களும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநான் சிவசக்தி ஆனந்தன் மாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் பிரதேசச் செயலாளர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் திணைக்கள தலைவர்கள் பொலிஸ் கடற்படை உயர் அதிகாரிகள் மீனவ விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.