(எம்.சி.நஜிமுதீன்)

புதிய அரசியலமைப்பு குறித்து அரசாங்கத்தின் நடைமுறை சம்பந்தமாக பாராளுமன்றில் விரைவில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பொரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு விடயத்ததை இரகசியமாக முன்னெடுத்து வருகிறது. அது தொடர்பிலான தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்துவதாக இல்லை. புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவருவதாக இருந்தால் அது குறித்து சகல மட்டங்களிலும் அபிப்பிராயம் பெறவேண்டும். மக்களின் ஒத்துழைப்புடனேயே அதனை மேற்கொள்ள வேண்டும். எனினும் பிரமதர் தமக்குத் தேவையான சிலரை வைத்துக்கொண்டு அவரது அலுவலகத்தில் பணிகளை முன்னெடுத்து வருகிறார். 

புதிய அரசியலமைப்பினூடாக நாட்டுக்கு நல்லது நடைபெறப்போவதில்லை. மாறாக பல்வேறு சிக்கல்களும் பாதிப்புகளும் ஏற்படவுள்ளது. எதிர்கால பரம்பரையினர் இதன் மூலம் பாரிய சிக்கலை எதிர்நோக்கவுள்ளனர். அதனூடாக நாட்டின் பாதுகாப்பும் சிக்கலுக்குரியதாக மாறும்.   

அரசாங்கம் திருட்டுத் தனமாக புதிய அரசியலமைப்பிற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. உத்தேச அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடங்களை நோக்கும்போது மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டு மாகாணங்களுக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

எனவே புதிய அரசியலமைப்பு நடைமுறை தொடர்பில் விரைவில் பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.