யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகி நிற்கும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வீடுகள் வழங்குவதில் தேசிய வீடமைப்பு அதிகார சபை விசேட கவனம் செலுத்த வேண்டுமேன அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் “2017 கம் உதாவ செமட்ட செவன” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மன்னார், நறுவிலிக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள "லூர்து நகர்" வீடமைப்புத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்களால்  இன்னும் நேசிக்கப்பட்டுவரும் உதாரண புருஷரான முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் புத்திரரான அமைச்சர் சஜித் பிரேமதாசவின் முயற்சியினால், வீடுகள் அற்றவர்களை வீடுகள் உள்ளவர்களாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அந்தவகையில், வடக்கிலும் மாதிரிக் கிராமங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இற்றைவரை 34 மாதிரி கிராமங்களை அவரது அமைச்சு அமைத்து வழங்கி உள்ளது.

வன்னி மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், அமைச்சர் என்ற வகையிலும் நான் அவரது நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவேன். நீண்ட காலமாக எமது மக்களுக்கு இருந்துவரும் இந்த வீடில்லாப் பிரச்சினை, அவரின் வருகையின் பின்னராவது தீரும் என எதிர்ப்பார்க்கின்றேன்.

அத்துடன், மன்னார் பள்ளிமுனையில் அவரது தந்தை பிரேமதாச அமைத்துக்கொடுத்த வீடுகள் தற்போது உடைந்த நிலையில் காணப்படுகின்றன. ஆகயைால் இவற்றைத் தகர்த்துவிட்டு புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.

இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் காதர் மஸ்தான், குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.