(இரோஷா வேலு)

கொழும்பு, புறக்கோட்டை மெலிபன் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலைய தொகுதியொன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட அனைத்து பொருட்களும் முற்றாக எரிந்து தீக்கிரையாகியுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை, மெலிபன் வீதியின் வர்த்தக கடைத்தொகுதியொன்றில் கைப்பைகளை விற்பனை செய்யும் கடையொன்றிலேயே இத்தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவல் குறித்து 119 அவசர சேவைக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து மூன்று தீயணைப்பு படையின் உதவியுடன் தீப் பரவலானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இருப்பினும் குறித்த வர்த்தக நிலையத்தின் 8 இலட்சத்துக்கும் அதிகமான சொத்துக்கள் சேதமாகியுள்ளன.

வர்த்தக நிலையத்தில் காணப்பட்ட மின் கம்பியில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே இத்தீப்பரவல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.