வாதுவை பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை வாதுவை பகுதியிலுள்ள விருந்துபசார நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டதில்  நால்வர் பாதிப்புக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இருவர் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு உயிரிழந்ததுடன் மற்றைய இருவருக்கும் தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் மேலும் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந் நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நான்காவது நபரும் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவத்தில் கஸ்பாவ, திவுலபிட்டிய மற்றும் வாதுவ பகுதிகளைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இருவரும் நேற்று முன்தினம் இரவும், 31 வயதுடைய நபரொருவரும் நேற்றும் உயிரிழந்ததுடன் இன்றைய தினம் உயரிழந்தவர் 28 வயதுடையவர் ஆவார்.

அத்துடன் உயிரிழந்த இவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை என தெரிவிக்கும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர, 20 பேர் வரையில் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந் நிகழ்வில் போது ஹோட்டலில் பரிமாறப்பட்ட உணவு மற்றும் மதுபான வகைகள் தொடர்பில் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருவதோடு குறித்த ஹோட்டலில் சி.சி.டி.வி கமராக்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன. 

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிக்காட்டலின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.