முல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர் மட்டத்தில் நடைபெறும் சந்திப்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள் சார்பில் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதியற்ற கடற் தொழில்களால் தமது வாழ்வாதாரத் தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் கடந்த 2ஆம் திகதி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட கடற் தொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்தும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இச் சம்பவங்களைத் தொடர்ந்து கடற் தொழில் மற்றும் நீரியள் வளங்கள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா ஆகியோரின் தலைமையில் எதிர் வரும் 8ஆம் திகதி அமைச்சில் நடைபெறும் சந்திப்பில் முல்லைத்தீவு மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் சார்பில் 10 பேரை கலந்து கொள்ளுமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் தாங்கள் யாரும் இக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள போவதில்லை என முல்லைத்தீவு மீனவர்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.