ஐக்கிய அமெரிக்காவும் இலங்கைங்கையும் பல்தேசிய பங்காளர்களுடன் இணைந்து பசுபிக் ஏஞ்சல் 2018 நடவடிக்கையின் ஓரங்கமாக அநுராதபுரத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன. 

பசுபிக் ஏஞ்சல் என்பது வருடாந்தம் நடத்தப்படும் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையாகும். இது பொது சுகாதாரம், பல் மருத்துவம், கண்பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் ரீதியான உதவிகள் அதேபோல், பல்வேறு துறைசார் நிபுணத்துவ பரிமாற்றங்களும் இதில் உள்ளடங்கியுள்ளன. ஏறக்குறைய 65 அமெரிக்க இராணுவ உறுப்பினர்கள் இலங்கையின் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினருக்குப் பயிற்சிகளை வழங்குவதுடன், கொழும்பு, அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் மருத்துவ மற்றும் பொறியியல் துறைசார் உதவிகளை வழங்குவர். 

இந்த நடவடிக்கை முழுவதிலும் இலங்கை விமானப்படையினரும் அமெரிக்கப் படையினரும் இணைந்து உள்ளளுர் பாடசாலைகளில் திருத்த வேலைகள் மற்றும் புதுப்பித்தல் பணிகளை முன்னெடுப்பர். அமெரிக்க மற்றும் இலங்கை விமானப்படை வீரர்கள் சிறந்த மருத்துவ நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ளவிருப்பதுடன், உள்ளுர்வாசிகளுக்கு பல்வேறு மருத்துவ சேவைகளையும் வழங்கவுள்ளனர். பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுகாதார பராமரிப்பு உதவியாளர்களும் இதில் பங்குகொள்ளவுள்ளனர். 

தற்போது பதினோராவது ஆண்டில் காலடியெடுத்துவைக்கும் பசுபிக் ஏஞ்சல் நடவடிக்கையானது மனிதாபிமான நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு பிராந்திய இராணுவங்கள் ஒன்றிணைந்து செயற்பட தயாராக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. 2007ஆம் ஆண்டு முதல் பசுபிக் ஏஞ்சல் நடவடிக்கையின் ஊடாக பல் மருத்துவம், கண்பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் உளவள சிகிச்சை என பல்வேறுபட்ட சுகாதார சேவைகள் தொடக்கம் கட்டுமான பொறியியல் நிகழ்ச்சித்திட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம், மற்றும்  துறைசார் அனுபவ பகிர்வுகள் மூலம் ஆயிரங்கணக்கான மக்களின் வாழ்க்கை மேம்படுத்தப்பட்டுள்ளன. 2016 ஆம் ஆண்டு பசுபிக் ஏஞ்சல் நடவடிக்கையானது யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களுக்காக நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இலங்கைக்கான அமெரிக்காவின் பதில் தூதுவர் ரொபர்ட் ஹில்டன் கருத்து வெளியிடுகையில், இணைந்து பணியாற்றக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் ஊடாகவும் எமது இராணுவங்களுக்கிடையிலான கூட்டாண்மை அதிகரிப்பதுடன், உள்ளுர் சமூகங்களும் நன்மை பெறுகின்றன. விஸ்தீரணமடையும் எமது பாதுகாப்பு கூட்டாண்மையானது இலங்கை வாழ் சாதாரண மக்களின் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை பசுபிக் ஏஞ்சல் பிரதிபலிக்கிறது என்றார்.