தாய் இறந்ததுகூட தெரியாமல் அவரது சடலத்துடன் ஒரு பெண் 2 நாட்கள் தனியாக வாழ்ந்துள்ள சம்பவம் கோவையை மட்டுமல்லாமல் தமிழகத்தையே அதிர்ச்சிக்கும், சோகத்திற்கும் உள்ளாக்கி உள்ளது. 

புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் 81 வயதான பாக்கியமேரி. இவருக்கு  2 மகள்களில் ஒருவருக்கு திருமணமாகி விட்டது. இன்னொரு பெண் 35 வயதான செல்வி,  சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். என்பதால் திருமணமும் செய்துவைக்க முடியவில்லை. 

அதனால் தன்னுடன் வைத்துக் கொண்டு கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார் பாக்கியமேரி. தள்ளாத வயதிலும் முடிந்தவரை செல்வியை கவனித்தே வந்தார் பாக்கியமேரி. 

இந்தநிலையில், நேற்று முன்தினம் இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இவர்களின் வீட்டை பார்த்தனர். அப்போது பாக்கியமேரி இறந்து கிடந்தது தெரியவந்தது. 

அருகில் செல்வி அமர்ந்து கொண்டு இருந்தார். பாக்கியமேரி இறந்து 2 நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகின்றது.. உடனடியாக ராமநாதபுரம் பொலிஸ் நிலையதிற்கு மக்கள் தகவல் அளித்தனர். 

விரைந்து சென்ற பொலிஸார், பாக்கியமேரியின் உடலை மீட்டு கோவை அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். 

தாய் இறந்தகூட தெரியாமல் சடலத்துடன், ஒரே வீட்டில் மகள் 2 நாள் இருந்துள்ள சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.