ஹேண்ட்ரிக்ஸ், டூமினி, அம்லா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோரின் அபார ஆட்டத்தினால் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான மூன்றாவது போட்டி இன்று காலை 10.00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமானது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணியை கேட்டுக் கொண்டது.

இதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின்  நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 363 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. 

தென்னாபிரிக்க அணி சார்பாக ஹேண்ட்ரிக்ஸ் 102 ஓட்டங்களையும் டூமினி 92 ஓட்டங்களையும் அம்லா 59 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 51 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

364 என்ற வெற்றியிலக்கினை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்டாக்காரர்களான உபுல் தரங்க மற்றும் திக்வெல்ல ஆகியோர் அதிரடி காட்ட நினைத்த போதும் அது சாத்தியப்படவில்லை. காரணம் இலங்கை அணி 20 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட வேளை 3.4 ஆவது பந்தில் திக்வெல்ல 10 ஓட்டங்களுடன் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் டூப்பிளஸ்ஸியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதனையடுத்து களம் புகுந்த குசல் பெரேரா எதிர்கொண்ட முதலாவது பந்திலே நான்கு ஓட்டங்களை விளாச ஆடுகளம் சூடு பிடித்தது. இருப்பினும் இவருடன் இணைந்து சிறப்பாக ஆடி வந்த உபுல் தரங்க 5.3 ஆவது ஓவரில் லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் முல்டரிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

குசல் பெரோ அதிரடியாக துடுப்பெடுத்தாடி 17 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 27 ஒட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை 8.4 ஆவது ஓவரில் பெலுக்கெய்யோவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்தார்.

10 ஒவர்கள் நிறைவின் போது இலங்கை அணி மூன்று விக்கெட்டுக்களினை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதன்  பின்னர் 11.3 பந்தில் திஸர பெரேரா 16 ஓட்டங்களுடன் முல்டரின் பந்து வீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேற அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் களம்புகுந்தார். 14 ஆவது ஓவரில் ஒரு ஆறு ஓட்டத்தையும் ஒரு நான்கு ஓட்டத்தையும் பெற்றுக் கொடுக்க இலங்கை அணி 100 ஓட்டங்களை எட்டியது. 

மெத்தியூஸுடன் இணைந்து நிதானமாக அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்க ஆரம்பித்த குசல் மெண்டீஸ் 19.3 ஆவது ஓவரில் 31 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை லுங்கி நிகிடியின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இவரையடுத்து நிதானமாக ஆடி வந்த  அணித் தலைவர் மெத்தியூஸ் 32 ஓட்டங்களுடன் சம்ஸியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த தனஞ்சய டிசில்வாவும் அகில தனஞ்சயவும் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். தனஞ்சய டிசில்வா 35 ஆவது ஓவரின் போது 47 பந்துகளை எதிர்கொண்டு 5 நான்கு ஓட்டங்கள் 1 ஆறு ஓட்டம் அடங்களாக அரை சதத்தினை பூர்த்தி செய்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 39.1 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அதன் பின் தனஞ்சய டிசில்வாவுடன் ஜோடி சேர்ந்து அசத்தலாக ஆடி வந்த அகில தனஞ்சய 37 ஒட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து ஆடுகளத்தில் அசத்தலாக ஆடி வந்த தனஞ்சய டிசில்வா 41 ஆவது ஓவரில் இரண்டு ஆறு ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து அதே ஓவரில் 66 பந்துகளுக்கு 8 நான்கு ஓட்டங்கள் 3 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 84 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற இவரையடுத்து வந்த பிரபாத் ஜயசூரிய எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் ஓட்டம் எதையும் பெறாது சம்ஸியின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி 45.2 ஓவர்களுக்கு சலக விக்கெட்டுக்களையும் இழந்து 285 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதன் மூலம் ஐந்து போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி 3:0 என்ற கணக்கில் தன்வசப்படுத்தி தொடரை கைப்பற்றியது.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக லுங்கி நிகிடி 4 விக்கெட்டுக்களையும் பெலுக்கெய்யோ மூன்று விக்கெட்டுக்களையும் சம்ஸி இரண்டு விக்கெட்டுக்களையும் முல்டர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக 89 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்ற ‍ஹேண்ட்ரிக்ஸ் தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்குமிடையான நான்காவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 08 ஆம் திகதி பகலிரவு ஆட்டமாக (2.30) மணிக்கு அதே மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.