மன்னார் மனிதப் புதைகுழியைத் தொடர்ந்து தோண்டுவதற்குத் தேவைக்கேற்ற வகையில் நிதியை வழங்க காணாமல் போனோருக்கான அலுவலகம் முன்வந்துள்ளது. 

மன்னார் சதொச நிறுவனம் செயற்பட்டு வந்த இடத்தில் இந்த மனிதப் புதைகுழி கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி கண்டு பிடிக்கப்பட்டது. 

மன்னார் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தலைமையில் இந்த மனிதப் புதைகுழி தோண்டப்பட்டு வருகின்றது. 

சட்ட வைத்திய புலானய்வு நடவடிக்கையாக, 48 நாட்களாக புதைகுழி தோண்டப்படுகின்றது. 

இதுவரையில் 62 மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வைத்தியர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

'மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு ஏற்கனவே நாங்கள் நிதியுதவி வழங்கியுள்ளோம். எதிர்காலத்திலும் இதற்கு உதவி செய்வதற்கான விருப்பத்தையும் நாங்கள் தெரிவித்துள்ளோம் என்று காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.  

இந்த மனிதப் புதைகுழியைத் தோண்டுவதற்கு அவசியமான சட்ட வைத்திய நிபுணர்களுக்கான அடிப்படை செலவுகள், போக்குவரத்து, தங்குமிடம் மற்றும் தொடர்புடைய எனைய உதவிகள் என்பவற்றுக்கான உதவிகளை சதொச நிறுவனம் வழங்கியிருந்தது.

இதற்கு மேலதிகமாக நீதி அமைச்சும் நிதி உதவி வழங்கியிருந்தது. இந்த உதவிகள் ஒரு மாதகாலத்திற்கு நீடித்திருந்ததாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வசதிகள் இல்லாமை, நிதிப்பற்றாக்குறை போன்ற காரணங்களுக்காக புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கையைக் கைவிட முடியாது என்ற காரணத்திற்காக காணாமல் போனோருக்கான அலுவலகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று நிதி வழ்ங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனித எலும்பு எச்சங்களில் ஆண்கள், பெண்கள் மட்டுமல்லால் சிறுவர்களுடையவையும் அடங்குகின்றன.

இந்த மனித எலும்பு எச்சங்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட நீதிபதி எம்.பிரபாகரனுடைய பொறுப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. 

இவைகள் அடுத்த கட்ட புலனாய்வுக்காகவும், ஆய்வு ரீதியான புலனாய்வு பகுப்பாய்வுக்காகவும் எப்போது கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படும் என்று இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்று சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த எலும்புகளுக்குரிய சடலங்கள் எப்போது புதைக்கப்பட்டன என்பதைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு ஐக்கிய அமெர்கிகாவில் உள்ள புளோரிடா மாநிலத்திற்குக் கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் டாக்டர் சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

வடமாகாணத்தில் மாத்திரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 

யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்கிலும் கிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருக்கலாம் என மதிப்பிடப்படுகின்றது.

ஆயினும் இதுவரையிலும், காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய உண்மையானதும் சரியானதுமான புள்ளிவிபரத் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.