இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 363 ஓட்டங்கள‍ை பெற்று 364 என்ற இமாலய வெற்றியிலக்கினை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. 

அந்த வகையில் இன்று காலை 10.00 மணிக்கு கண்டி பல்லேகலயில் ஆரம்பமான இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையேயான மூன்றாவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலாவதாக துடுப்பெடுத்தாடுமாறு தென்னாபிரிக்க அணிக்கு அழைப்பு விடுத்தது.

இதற்கிணங்க முதலாவதாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க அணி சார்பில் களமிறங்கிய ஹஸீம் அம்லா மற்றும் டீகொக் ஜோடியினர் 42 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்திருந்த போது லஹிரு குமாரவின் பந்து வீச்சில் டீகொக், குசல் பெரேராவிடம் பிடிகொடுத்து இரண்டு ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெளியேறினார்.

 

இதனையடுத்து களமிறங்கிய ஹேண்ட்ரிக்ஸ் அம்லாவுக்கு பக்க பலமாக இருந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை  அதிகரிக்க ஆரம்பித்தார். இருவருமாக இணைந்து அணிக்காக 59 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை 16 ஓவிரன் இறுதிப் பந்தில் அம்லா 59 பந்துகளுக்கு ஒன்பது நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 59 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை திஸர பெரேராவின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து ஆடுகளம் புகுந்த அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 10 ஓட்டங்களுடன் வெளியேற அடுத்து களமிறங்கிய டூமினி ஹேண்ட்ரிக்ஸுடன் இணைந்து இலங்கை அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை வெளுத்து வாங்கினர்.

35 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரு நான்கு ஓட்டங்களை விளாசி எட்டு நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஒட்டம் அடங்களாக 88 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்த ஹேண்ட்ரிக்ஸ், லஹிரு குமாரவின் அதே ஓவரின் இறுதிப் பந்தில் பொல்ட் முறையில் அட்டமிழந்தார். இதனையடுத்து டூமினி 39.4 பந்தில் அரைசாதம் கடந்தார். 

ஒரு கட்டத்தில் தென்னாபிரிக்க அணி 40 ஓவர்கள் நிறைவின் போது நான்கு விக்கெட்டுக்களை இழந்து 249 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு மிகவும் வலுவான ஒரு நிலையில் இருந்தது. 

45 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஓட்டங்கள் இரண்டு ஆறு ஓட்டங்களை விளாசி 70 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்கள் 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 92 ஓட்டங்களை பெற்றுக் அதிரடியாக பெற்றுக் கொண்ட டூமினி திஸர பெரேராவின் பந்து வீச்சில் அகில தனஞ்சயவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் டேவிட் மில்லர் 46 பந்துகளில் அரை சதம் கடந்து, திஸர பெரேராவின் அடுத்த பந்தில் தனஞ்சய டிசில்வாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 263 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 264 ஓட்டம் என்ற இமாலய இலக்கினை நிர்ணயித்தது. 

பந்து வீச்சில் இலங்கை அணி லஹிரு குமார 67 ஓட்டங்களக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் திஸர பெரேரா 75 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 81 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

மேலும் கண்டி பல்லேகல மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.