இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை காலை 10.00 மணிக்கு கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட்டித் தொடரை இலங்கை அணி 2:0 என்று கைப்பற்றியுள்ளது இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி  இரண்டு போட்டிகளை வென்று 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

அந்த வகையில் கடந்த 29 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. இதனையடுத்து அதே மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது போட்டியிலும் தென்னாபிரிக்க அணி நான்கு விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.

இந் நிலையில் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி அவசியம் வெற்றி பெற்றே ஆக வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளது. நாளை இடம்பெறும் போட்டியில் இலங்கை அணி தோல்வியை தழுவினால் தென்னாபிரிக்க அணி ஒரு நாள் தொடரை கைப்பறி ருஷித்துவிடும். 

ஆகையினால் நாளைய போட்டியிலாவது இலங்கை அணி வியூகம் வகுத்து போட்டியை வெற்றிக் கொண்டு தொடரை தக்க வைக்க முயற்சியை மேற்கொள்ளுமா அல்லது போட்டியில் மண்டியிட்டு கிண்ணத்தை தென்னாபிரிக்காவிடம் பறிகொடுத்து சொந்த மண்ணில் தலைகுனியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நாளை களமிறங்கவுள்ள மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணிக் குழாமில் உபுல் தரங்க, நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டீஸ், செஹான் ஜெயசூரிய, திஸர பெரேரா, அகில தனஞ்சய, சுரங்க லக்மால், பிரபாத் ஜெயசூரிய, கசூன் ராஜித, லக்ஷான் சந்தகான், தனஞ்சய டிசில்வா மற்றும் தசூன் சானக்க ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

டுப்பிளஸ்ஸி தலைமையிலான தென்னாபிரிக்க அணிக் குழாமில் டிகொக், ஹஸிம் அம்லா, மக்ரம், டூமினி, டெவிட் மில்லர், முல்டர், ரபடா, சம்ஸி, லுங்கி நிகிடி, கிளேஸின், கேஷவ் மஹாராஜ், ஹென்ரிக்ஸ் மற்றும் ஜூனியர் டாலா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.