(இராஜதுரை ஹஷான்)

நாட்டில் ஜனநாயகத்தை  அழிக்கும் நடவடிக்கைகளையே தேசிய அரசாங்கம் முன்னெடுப்பதாக பேராசிரியர் ஜி. எல். பீரீஸ் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்தார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனநாயக  தேசிய நிலையத்தின்  பிரதிநிதிகளான  ஐவன் டோஹடி,  டேவிட் மெக்ராட்ஸ் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

பேராசிரியர் ஜி.எல். பீரீஸின் இல்லத்தில் இன்று காலை இடம் பெற்ற இச் சந்திப்பில்  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும்  தாரக பாலசூரிய ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இக்கலந்துரையாடல் தொடர்பில் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் குறிப்பிடுகையில்,

"தேசிய அரசாங்கத்தில் ஜனநாயகம் என்பது வெறுமனமே பேச்சளவில் மாத்திரமே பின்பற்றப்பட்டு வருகின்றது. தேர்தல் காலத்திற்கு காலம் இடம் பெற வேண்டும் ஆனால் தேர்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்துவதே தற்போது அரசாங்கம் நோக்கமாக கொண்டுள்ளது.  உள்ளூராட்சிமன்றங்களின் பதவி காலம் நிறைவடைந்து 2 வருடத்திற்கு பிறகே  உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம் பெற்றது.   

அரசாங்கம் விரைவில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று  நீதிமன்றத்தை நாடிய பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம் பெற்றது. இதன் தொடர்ச்சியே தற்போது மாகாண சபை தேர்தலிலும் தொடர்கின்றது.

அரசாங்கம் மேற்கொள்ளும் தீர்மானங்கள் வினைத்திறனற்றதாகவே காணப்படுகின்றது.  மாகாண சபை தேர்தலை பழைய முறையிலே நடத்துவதாக பிரதமர் கடந்த மாதம் இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் குறிப்பிட்டார். அதன் பிறகு கட்சி தலைவர்கள் தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு இணக்கப்பாடு  தர மறுக்கின்றனர் என்று குறிப்பிட்டு மீண்டும் கலந்தாலோசிப்பதாக குறிப்பட்டு காலத்தினை மாத்திரமே கடத்தி வருகின்றனர்.

இவ்வருடத்தில்  தேர்தல்கள் இடம் பெறும் என்பது வெறும்  வார்த்தைகளாகவே காணப்படும் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்தாமல்  2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுக்கவே முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. 

ஜனாதிபதி தேர்தலிலும் பொது எதிரணியினரே அமோக வெற்றிப் பெறுவர். ஆனால் தற்போது பதவி காலம் நிறைவடைந்துள்ள  மாகாண சபைகளில் முறையற்ற விதத்தில் நிர்வாகங்கள் இடம் பெற்று வருகின்றது.  எதிர்வரும் நவம்பர் மாதம் மேலும் 3 மாகாணங்களின் பதவி காலங்கள் நிறைவடையவுள்ளது.

இதன் காரணமாகவே மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த அழுத்தங்களை கொடுத்து வருகின்றோம். பாராளுமன்றத்தில் நடு நிலையாக செயற்பட  வேண்டிய  சபாநாயகரும், எதிர்த்து பேச கூடிய எதிர் கட்சி தலைவரும் பிரதமரின் பங்காளிகளாகவே செயற்படுகின்றனர்.

தேசிய அரசாங்கம் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயற்திட்டங்களும் ஒரு தரப்பினருக்கு மாத்திரமே  சாதகமாக காணப்படுகின்றது தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களது வேதனம் அதிகரிக்க தீர்மானித்துள்ளமை வன்மையாக கண்டிக்கத்தக்கது இன்று நாட்டு மக்கள் பொருளாதர ரீதியில்  பின்னடைவினை எதிர்கொண்டு  வருகின்றனர் வாழ்க்கை செலவுகள் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. அமைச்சர்களின் வேதனம் அதிகரித்தால் மக்களின் மீதான வரிச்சுமையும் அதிகரிக்கப்படும் .

இவ்வாறான  விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் காணப்படுகின்ற ஜனநாயக முறைகள் எத்தன்மையில் காணப்படுகின்றது என்பதை  புரிந்துக் கொள்ள முடியும்.  பேச்சு சுதந்திரத்தை மாத்திரம் கொடுத்து விட்டால்  ஜனநாயகம் முழுமையடைந்து விடாது. ஆகவே  2020ம் ஆண்டு நிச்சயம் ஆட்சி மாற்றம் இடம் பெறும்  அதன் பின்னரே நியாயமான சுதந்திரம் நிலைநாட்டப்படும் என தெரிவித்தார்.