(எம்.மனோசித்ரா)

தரம் 5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை நாளை இடம்பெறவுள்ளதுடன் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நாளை  மறு நாள்ஆரம்பமாகி அடுத்த மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இவ்வாண்டு 3 இலட்சத்து 55, 321 பரீட்சாத்திகள் புலமை பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். 

இவர்களில் 87 ஆயிரத்து 556 தமிழ் மொழி மூல பரீட்சாத்திகளும், 2 இலட்சத்து 67, 765 சிங்கள மூலமான பரீட்சாத்திகளும் உள்ளடங்குவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். இம்முறை பரீட்சைக்காக நாடளாவிய ரீதியில் 3050 பரீட்சை நிலையங்கள் நிருவப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இதே வேளை இவ்வருடம் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு 2 இலட்சத்து 44, 146 பாடாசாலை மூலமான பரீட்சாத்திகளும், 77 ஆயிரத்து 323 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர். உயர்தர பரீட்சைகளை நடத்துவதற்காக 2, 268 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பரீட்சை நிலையங்களில் இடம்பெரும் மோசடிகளை கட்டுப்படுத்துவதற்கென விசேட கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசி மற்றும் கணிப்பான் உள்ளிட்ட இலத்திரனியங்கள் சாதனங்களை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, பரீட்சை ஒழுங்குகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையாளர் தெரிவித்தார். 

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் சோதனைகளை மேற்கொள்வதற்கும் விஷேட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.