பாகிஸ்தானில் உள்ள 12 பாடசாலைகளுக்கு தீவிரவாதிகள் தீ வைத்ததில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியிலுள்ள கில்கிட்-பல்டிஸ்தான் பகுதியில் தொடர்ந்து வன்முறை தலைவிரித்தாடுகிறது. தீவிரவாதிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளனர். கல்வி நிலையங்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் கில்கிட்-பல்டிஸ்தான் பகுதிக்குட்பட்ட சிலாஸ் நகரில் உள்ள 12 பாடசாலைகளுக்கு நேற்று இரவு தீவிரவாதிகள் தீ வைத்தனர். இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. 

தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பாடசாலைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக்கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தீ வைத்த தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றதோடு பாதுகாப்புக்காக கூடுதல் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரையில் பொறுப்பேற்கவில்லை