ஆப்கானிஸ்தானில் பள்ளி வாசல் ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இரட்டை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 39 பேர் பலியாகியுள்ளனர்.

பாகிஸ்தான் எல்லையையொட்டிய பாக்தியா மாகாணத்தின் கார்தேஷ் பகுதியில் அமைந்துள்ள பள்ளி வாசல் நேற்று  தொழுகையின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இரண்டு தற்கொலை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் பொருத்தியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 39 பேர் உயிரிழந்தனர் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பில் 70 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள்  மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் பலரது நிலை மோசமாக உள்ளது எனவே உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என பாதுகாப்பு படையினர் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.

இத்தாக்குதலுக்கு எந்தஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு எற்கவில்லை. 

ஆப்கானிஸ்தானின் நகர்புறங்களில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஐ.எஸ். மற்றும் தலிபான் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.

பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு கொடுத்துவரும் அழுத்தம் காரணமாக தலிபான் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் எதற்கும் பொறுப்பு கூறுவது கிடையாது.

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் தொடர்ந்தும் கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.