(நா.தனுஜா)

இவ் ஆண்டின் முடிவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் நான்கு சதவீதமாக உயரும் என எதிர்வு கூறியிருக்கும் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி பணவீக்கம் கடந்த வருடத்தை விட இவ்வருடம் குறைவடைந்துள்ளமையால் மிதமான நிலை பேணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாணயச்சபையின் மீளாய்வுக்கூட்டத்தொடர் தீர்மானங்களை அறிவிப்பதற்காக இன்று மத்திய வங்கியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மத்திய வங்கி ஆளுநர் இதை தெரிவித்தார். 

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,

நாணயச்சபை வட்டி வீதங்களை மாற்றமின்றிப் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளதோடு, பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் மேலும் கட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளது. அத்தோடு இவ்வருடம் மே மாதம் வரையான காலப்பகுதியில் இறக்குமதிக்கான செலவினத்தை விடவும் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளமையால் நடைமுறைக்கணக்கில் பற்றாக்குறை நிலை தோன்றுவதை குறைந்துள்ளது.

பணவீக்கம் இவ்வருடம் ஜுலை மாதத்தில் 5.4 சதவீதமாக பதிவாகியுள்ள போதிலும் இவ்வருட இறுதிக்குள் இதனைப் பெருமளவு குறைக்க முடியும். வெளிநாடுகளிலிருந்து மோட்டார் வாகனம், தங்க ஆபரணம் மற்றும் எரிபொருள் என்பவற்றின் இறக்குமதி அதிகரித்துள்ளது. நாட்டின் போக்குவரத்து முறைமை சீரமைக்கப்பட்ட பின்னர் இவ்வருடம் மே மாதம் வரை 6.9 சதவீதமாக உள்ள மோட்டார் வாகன இறக்குமதி பெருமளவில் குறைவடையும் என்றார்.