ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டரன் லீமன் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது அவுஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்த முயன்றமை அம்பலமாகியதை தொடர்ந்து ஊடகங்கள் அவுஸ்திரேலிய வீரர்கள் களத்தில் நடந்துகொள்ளும் விதத்தினை கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்நிலையிலேயே இந்த சர்ச்சையின் பின்னர் தனது பதவியை இராஜினாமா செய்த லீமன் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவுஸ்திரேலிய வீரர்கள் மோசமானவர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

மக்குயர் ஸ்போர்ட்ஸ் ரேடியோவிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நான் பயிற்றுவிப்பாளராக  பணியாற்றிய காலத்தில் எனது அணியினர் கடுமையாக வும் நேர்மையாகவும் விளையாடினர் என குறிப்பிட்டுள்ள லீமன் கடந்த காலத்தை விட எனது காலத்தில் ஆடுகளத்தில் எதிரணிகளுடன் சொற்போரில் ஈடுபடுவது குறைந்து காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

நான் விளையாடிய காலத்தில் எதிரணி வீரர்களை வார்த்தைகளால் சீண்டுவது அதிகமாக காணப்பட்டது எனவும் லீமன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர்கள் எனது காலத்தில் அளவுக்கதிகமான ஆக்ரோசத்துடன் விளையாடிய தருணங்கள் சில உள்ளன,அவர்கள் எல்லையை மீறிய தருணங்களும் உள்ளன இதனை ஐசிசி உரிய விதத்தில் கையாண்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய வீரர்கள் அவ்வாறே விளையாடுவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் ஊடகங்கள் சித்தரிப்பது போன்று அவர்கள் மோசமானவர்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணிக்கான இரசிகர்களின் ஆதரவு குறைவடைவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்  இரசிகர்களின் ஆதரவை மீற பெறவேண்டும் அதற்கு அணி தொடர்ந்து வெற்றிகளை பெறுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.