இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நேற்றுமுன்தினம் எட்ஜ்பாஸ்டனில் ஆரம்பமானது. இதில் நாணைய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி இங்கிலாந்து அணி போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவின்போது 9 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை எடுத்திருந்தது. இந் நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் 285 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி மேலும் இரண்டு ஓட்டங்களை பெற்றிருந்தபோது இறுதியாக இருந்த விக்கெட்டினையும் இழக்க 287 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக அணித் தலைவர் ரூட் 80 ஓட்டங்களையும் ஜென்னிங்ஸ் 42 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களையும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.

இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்திய அணி 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. இருப்பினும் 14 ஆவது ஓவரில் சாம் குர்ரான் வீசிய பந்தில் பந்தில் முரளி விஜய் எல்.பி.டபிள்யூ மூலம் ஆட்டமிழக்க அடுத்து வந்த லோகேஷ் ராகுல் சாம் குர்ரானனின் அதே ஓவரின் 6 ஆவது பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 16 ஆவது ஓவரையும் சாம் குர்ரான் வீசிய போது தவான் மாலனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் 4 ஆவது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரஹானே, நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இருப்பினும் பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஜென்னிங்கிடம் பிடி கொடுத்து வெளியேற, அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் ஓட்டம் எதுவும் பெறாது டக்கவுட் ஆனார். 

ஒரு கட்டத்தில் இந்திய அணி 100 ஓட்டங்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

அடுத்தடுத்து இந்திய அணியின் விக்கெட்டுக்கள் சரிய அணித் தலைவர் விராட் கோலி மற்றும் இந்திய அணிக்கு நம்பிக்கையை அளித்தார். அதன்படி அவர் 225 பந்துகளுக்கு 22 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 149 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியாக இந்திய அணி 76 ஓவர்களின் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 274 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. 

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக சாம் குர்ரான் 4 விக்கெட்டுக்களையும் அண்டர்சன், ரஷித், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். 

இதனையடுத்து 13 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி 3.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

இதற்கிணங்க இங்கிலாந்து அணி 22 ஓட்டங்களினால் முன்னிலையில் உள்ளது. இன்று போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமாகும்.