(எம்.மனோசித்ரா)

பொது மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான மருத்துவ சேவையை பாதிக்கக் கூடிய வகையில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அடிக்கடி வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டால் அதற்கெதிராக நீதிமன்றங்களை நாட வேண்டிய நிலை உருவாகும் என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவைர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை செய்திருக்கின்றது. 

நாளைய தினம் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தம் செய்யவிருக்கும் நிலையில் அது குறித்து நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

அத்தியாவசிய தேவைகளுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தமொன்றை முன்னெடுக்க தீர்மானித்தால் அது தொடர்பில் 21 நாட்களுக்கு முன்னர் உரிய தலைமையகத்திற்கு அறிவிக்க வேண்டும். இது தொடர்பில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகள் பின்பற்றப்படாவிட்டால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே பொது மக்களுக்கு சேவை வழங்கக் கூடிய அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் நீடிக்குமாக இருந்தால் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு என்ற அடிப்படையில் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.