வடக்கு அரசியல்வாதிகள் சேவை செய்யாததால் தான் நான் இங்கு சேவை செய்கின்றேன் -வடமாகாண ஆளுநரின் பிரத்தியேக நேர்காணல்

Published By: Priyatharshan

02 Aug, 2018 | 03:12 PM
image
  • நான் ஒரு இனவாத அரசியல்வாதியல்ல. 

  • மக்கள் நலனில் முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போன்று தமிழ் அரசியல்வாதிகளும் இருக்க வேண்டும்.

  • வடக்கு அரசியல்வாதிகள் சேவை செய்யாததால் தான் நான் இங்கு சேவை செய்கின்றேன்.

  •  வடக்கு அரசியல்வாதிகள் பெரிய கதைகளைக் கூறுகின்றனர் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

  • முரண்பாடுகள் மக்களுக்கு சேவைசெய்வதிலேயே இருக்க வேண்டும். 

  • தகுந்த அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும்.

  • நான் இறந்தால் எனது உடலை இங்கு தான் அடக்கம்பண்ண வேண்டும்.

  • தமிழ் மக்களின் ஆதரவையும் அன்பையும் எனக்கு புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளதால் ஏனைய அரசியல் அரசியல்வாதிகளாலும் புரிந்துகொள் முடியும்.

  • மக்கள் சேவை செய்வதற்கு நல்ல சிந்தனை இருக்க வேண்டும்.

  • தனிப்பட்டவர்களின் பிரச்சினையே வடமாகாண சபையில் அதிகம்

  • வடக்கில் இராணுவம் மக்களின் சேவையில் அக்கறை கொண்டுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் அவ்வாறில்லை.

  • யாழ்.கோட்டைக்குள் இராணுவத்தை அனுப்பிவிட்டு பொதுமக்களின் காணிகளை கையளிக்க முடியும்

  • தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் ஆர்வமாகவுள்ளது.

  • போதைப்பொருள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்த வடக்கில் இராணுவம் தேவை

  • தெற்கிலிருந்து மனிதத்தன்மையையே வடக்கிற்கு கொண்டுவர வேண்டும்.

  • பொது மக்களின் சொந்தக்காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பதே அரசாங்கத்தினுடைய நோக்கம்.

வடமாகாண அமைச்சர்களிடத்தில் உள்ள முரண்பாடுகள் மற்றும் வடமாகாணத்தில் தற்போது தலைதூக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் வடமாகாணத்தில் தமிழ் பொலிஸாரின் இணைப்பு முக்கியமானதெனவும் வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு, 

கேள்வி : வடமாகாணத்தில் அநேக பிரச்சினைகள் தலை தூக்கியுள்ளன, அவற்றை நீங்கள் எவ்வாறு தீர்த்து வைக்கின்றீர்கள் ? குறிப்பாக தமிழ் மொழிமூலம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கையாளுகின்றீர்கள் ? 

பதில் : நாம் சேவை செய்வதற்கு முன்னர் அவர்களின் பிரச்சினைகளை நன்றாக ஆராய்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். நல்ல சிந்தனை இருக்க வேண்டும். தத்துவம் இருக்கவேண்டுமென நினைக்கின்றேன்.

நான் புரிந்துகொள்கின்றதைப்போல் இந்நாட்டு மக்களின் அபிவிருத்தி மீது அக்கறை இருக்க வேண்டும். இங்கு கல்வி மாத்திரமே உள்ளது. கடந்த 500 வருடங்களுக்கு முன்பிருந்து ஐரோப்பாவிலிருந்து வந்தவர்களும் எவ்வித அபிவிருத்திகளை மேற்கொள்ள வில்லை.

குறிப்பாக அவர்கள் தென்பகுதியில் தொழிற்சாலைகளை ஆரம்பித்திருந்தனர். தேயிலைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்திருந்தார்கள் மற்றும் வீதி அபிவிருத்திகளை மேற்கொண்டிருந்தனர். வட பகுதியில் அப்படி எவ்வாறான முன்னேற்றங்களும் இடம்பெறவில்லை.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னரும் அபிவிருத்திகள் யாவும் அவ்வாறே இடம்பெற்று வருகின்றன. அதற்கொரு காரணம் தான் தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் எதிர்க்கட்சியில் இருந்து அரசியல் செய்தமை. நாம் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் தலைவர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் எந்தக்கட்சி ஆட்சியமைக்கின்றதோ, அந்தக் கட்சியுடன் இணைந்து அவர்களுடைய முஸ்லிம் சமூகத்திற்கு சேவையை பெற்றுக்கொடுக்கின்றனர்.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் தலைவர்கள் அவர்களுடன் இணைந்து தமது மக்களுக்குத் தேவையான அபிவிருத்திகளைப் பெற்றுக்கொடுக்கின்றனர்.

தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதால் மக்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெறுவதில்லை.

இதனால் துன்பப்பட்ட, பண வசதியில்லாத, பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை , சோதனை சித்திரவதைப்படுவதையும் அதுமட்டுமல்லாது, கடந்தகால 30 வருட யுத்தத்தில் மிகப்பெரிய வேதனைகளை அனுபவித்துள்ளனர்.

இந்தநேரத்தில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து அரசியல் கட்சிகளின் பேதத்தை மறந்து மக்களுக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

கேள்வி ; தமிழ் அரசியல்வாதிகளிடத்தில் முரண்பாடுகள் உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தீர்கள், இதனால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படவில்லையெனவும் குறிப்பிட்டிருந்தீர்கள் .வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் முரண்பாடுகளை எவ்வாறு சீர்செய்து  திட்டங்களை முன்னெடுக்க முடியுமென நினைக்கின்றீர்கள் ?

பதில் ; முரண்பாடுகள் இல்லாத எவரும் இந்த உலகத்திலே இருக்க முடியாது. கட்சிக்குள்ளே, கட்சிக்கு வெளியே, நாட்டிற்குள்ளே, வெளிநாட்டில் என்று அனைத்து இடங்களிலும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இதுவொரு இயற்கையான விடயம். அவ்வாறான முரண்பாடுகள் எல்லாம் மக்களுக்கு சேவை செய்வதிலேயே அவை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவ்வாறான முரண்பாடுகள் அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவேயன்றி மக்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகவல்ல.

நான் இளைஞராக இருந்த காலத்தில் எமது நோக்கம் இருந்தது.  ஒரு பொதுவுடைமைக் கோட்பாட்டு அரசாங்கம் இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டுமென கோரி போராட்டங்களை மேற்கொண்டு, சிறைக்குச் சென்றோம். 

நான் ஒரு கதையொன்றை சொல்ல விரும்புகின்றேன் . அந்தக்காலத்தில் ஒரு பிச்சைக்காரன் வந்து என்னிடம் 10 சதம் கேட்டார். அதற்கு நான் அளித்த பதில் இயலாதென. காரணம் என்னவென்றால் நான் அவர்கள் கேட்ட 10 சதத்தை கொடுத்தால் அவர்கள் எந்தநாளும் தொடர்ச்சியாக இவ்வாறு பிச்சை எடுப்பார்கள் என்று. நான் அந்த பிச்சைக்காரனிடம் தெரிவித்தேன் நீங்களும் எம்முடன் இணைந்து வாருங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வெற்றிபெற்று அரசாங்கத்திற்கு எதிராக நல்ல பலம் சேர்ப்போம் என்று. 

கடந்த 40 வருடங்களின் பின்னர் நான் என்ன செய்தன். இறுதியில் அந்த போராட்டமும் வெற்றியடையாமல் போனது அத்துடன் அந்த பிச்சைக்காரனுக்கு 10 சதம் கூட கொடுக்க முடியாது போனது. இதேபோல் தன் இந்த வடக்குப் பிரதேசத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் பெரிய கதைகளைக் கூறிக்கொண்டுள்ளனர். ஆனால் எதுவும் செய்யவில்லை. அவர்களுக்கு வேறு எதாவது நோக்கம் இருந்தால் அது பராவாயில்லை, ஆனால் இந்த மக்களுக்கு அவர்கள் சேவை செய்ய வேண்டும். அவர்கள் சேவை செய்யாதபடியால் தான் நான் இங்கு சேவை செய்கின்றேன்.

இதேவேளை, மக்களுடைய கடமையும் இருக்கின்றது. நாமும் அரசியல்வாதிகள் மீது எந்தநேரமும் பிழைகூற முடியாது. இவ்வாறான அரசியல்வாதிகள் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு மக்கள் தானே உதவிசெய்கின்றனர். இறுதியில் இந்த மக்கள் தான் வேதனையடைகின்றனர்.  

வடமாகாணம் மிகவும் அழகிய அழகான பிரதேசம். இங்கே திட்டங்களை மேற்கொள்வதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. நாம் எங்கு போனாலும் அதனை நிறைவேற்றணே்டும்.  திட்டங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அரசியல்வாதிகள் ஏனையோரை வழிகாட்ட வேண்டும்.

கேள்வி ; வடமாகாண சபையில் டெனீஸ்வரன் தொடர்பான சர்ச்சையை எவ்வாறு நோக்குகின்றீர்கள் ?

பதில் : உங்களுக்குத் தெரியுமா இல்லையா என்று எனக்குத் தெரியாது, அமைச்சர்களுடைய திட்டங்களை எடுத்துக் கூறுவதற்கும் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் முதலமைச்சர் குழுவொன்றை நியமித்தார். அந்தக் குழுவில் யார் குற்றம் செய்தார்கள் யார் குற்றம் செய்யவில்லையென வெளிப்படுத்தப்பட்டது.டெனீஸ்வரன் மீது எவ்வித குற்றமும் இல்லையென்றே அக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் அக்குழுவினால் குற்றமற்றவர் எனத் தெரிவிக்கப்பட்ட அமைச்சர் டெனீஸ்வரனை பதவியில் இருந்து விலகுமாறு முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அமைச்சரும் இயலாது எனத் தெரிவித்திருந்தார். இதன் பின்னரே வடமாகாண சபையில் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. இதன்பின் இந்தப் பிரச்சினை தொடர்பில் நீதிமன்றத்திற்கு சென்று உத்தரவுகள் எடுக்கப்பட்ட நிலையில், வடமாகாண சாபையால் எதுவும் செய்ய முடியாது உள்ளது. இதனால் நீதிமனற்தால் மற்றுமொரு தீர்மானம் வரும்வரை பார்த்துக்கொண்டு இருக்க வேண்டியது தான் மிச்சம். இது வந்து அரசியல்வாதிகளுடைய பிரச்சினை மாறாக சிங்கள - தமிழ் மக்களுடைய பிரச்சினையல்ல.  அல்லது ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமிடையிலான பிரச்சினை அல்ல. இது அவர்களின் கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்சினை. இதனால் தான் வடமாகாண சபையில் இவ்வாறான பிரச்சினை உருவாகியுள்ளது.

கேள்வி ; யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதிக்குள் இராணுவத்தை  அனுப்புவதாக பேசப்படுகின்றதே ? அது தொடர்பில் வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் உங்களுடைய நிலைப்பாடு என்ன ?

பதில்  : இராணுவம் எதற்காக ? யுத்தம் செய்வதற்காக, ஆனால் தற்போது யுத்தம் நிறைவடைந்துள்ளது. எல்லோருக்கும் சொல்ல முடியும் இராணுவம் தற்போது எதற்கென்று. யுத்தம் நடைபெறாத பிறநாடுகளிலும் இராணுவம் உள்ளது. ஒரு நாட்டைப் பாதுகாப்பதற்கு ஒவ்வொரு நாட்டிலும் நிரந்தரமான இராணுவத்தினர் இருக்க வேண்டியது கட்டாயம். அது தான் உண்மையும் கூட. இலங்கையிலும் அவ்வாறே உள்ளது. யுத்தம் நடைபெறும் காலங்களில் அதிகளவிலான இராணுவத்தினரை இராணுவத்திற்குள்ளீர்த்தோம். ஆனால் இப்போது யுத்தம் நிறைவடைந்துள்ளது. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களை விரட்டி வீட்டிற்கு அனுப்ப முடியுமா ? அப்படியும் சொல்ல முடியாது . இருந்தாலும் அந்த இராணுவத்தினர் யுத்தத்திலீடுபடுகின்றார்களா அல்லது பொது மக்களுக்கு அநியாயம் செய்கின்றார்களா ? அல்லது மக்களை கொலை செய்கின்றார்களா ? அவ்வாறான செயற்பாடுகள் ஒன்றும் இங்கே இல்லை. அது மட்டுமல்ல இராணுவத்தினர் மக்களுக்கு சேவை செய்கின்றனர்.

குறிப்பாக வைத்தியசாலையில் இரத்தம் தட்டுப்பாடு நிலவுகின்ற நேரத்தில் வைத்தியசாலை உயரதிகாரிகள் யாரிடம் உதவியை நாடுகின்றனர் இராணுவத்தினரிடம் தான்.  உடனடியாக இராணுவத்தினர் வைத்தியசாலைக்கு சென்று இரத்தம் வழங்கி இங்கு வாழும் தமிழ் சகோதரங்களுக்கு உதவி செய்கின்றனர்.

வடபகுதியில் ஒரு கொண்டாட்டமோ அல்லது விழாக்கள் வந்தாலும் அவர்கள் தமது சேவைகளை வழங்குகின்றனர். அதைவிட இயற்கை அனர்த்தங்கள் வந்தாலோ குறிப்பாக வெள்ளம் போன்றவற்றின் போது அவர்கள் சேவையை வழங்குகின்றனர். இங்கு இடம்பெறும் வீட்டுத்திட்டங்களிலும் அதனை கட்டுவதற்காக ஒப்பந்தம் எடுத்த நபர்கள் இடைநடுவில் விட்டுச் சென்றுவிட்டனர். அந்தநேரத்திலும் உடனடியாக இராணுவத்தினர் வந்து அதனை நிறைவேற்றிக்கொடுத்தனர். பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி வழங்குகின்றனர். பாடசாலைகள் அமைத்துக்கொடுத்தல், வைத்தியசாலைகள் நிர்மாணித்துக்கொடுத்தல் போன்ற உதவிகளை இராணுவத்தினர் இங்கு மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு மூளை இருந்தால் இவ்வாறு இராணுவத்தினர் செய்யும் அபிவிருத்தித்திட்டங்களை எடுத்து மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு  அத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதைத் தானே அரசியல்வாதிகள் செய்யவேண்டும். பொது மக்களின் சொந்தக்காணிகளை மக்களிடம் திரும்பக் கையளிப்பதே அரசாங்கத்தினுடைய நோக்கம்.

அதை நாம் செய்வோம். தற்போதும் செய்து கொண்டு தான் இருக்கின்றோம். இன்னும் சொற்ப காணிகளே உள்ளன அவற்றையும் எதிர்காலத்தில் வழங்குவோம். இராணுவத்தினர்களின் முகாம்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளுக்கு கொண்டு செல்லப்படும். பொது மக்களின் காணிகள் அனைத்தும் உரியவர்களிடமே திருப்பி கையளிக்கப்படும்.

உதாரணமாக சொல்லப்போனால் யாழ்ப்பாணக் கோட்டையை எடுத்துக்கொண்டால் அங்கு 40 ஏக்கர் நிலப்பரப்பு இருக்கின்றது. அங்கு இராணுவத்தினரை அனுப்பிவிட்டு மக்களின் சொந்தக் காணிகளை வழங்க முடியும்.

அந்தக்காலத்தில் போத்துகீசர், ஆங்கிலோயர், ஒல்லாந்தர் காலங்களில் இராணுவத்தினர் அனைவரும் கோட்டைக்குள் இருந்தனர் ஆனால் தற்போது இராணுவத்தினர் அனைவரும் மக்களுடைய வீடுகளில் இருக்கின்றனர். இதனால் அவர்கள் திருப்பி கோட்டைக்குள் சென்றால் பிரச்சினை தீர்ந்துவிடும்.

அது மட்டுமல்ல இந்தியா போன்ற பகுதிகளில் இருந்து எமது நாட்டுக்குள் போதைவஸ்து கடத்தப்படுகின்றது. கேரள கஞ்சா கடத்தப்படுகின்றது. அவற்றை கைப்பற்றுவதற்கு எவரும் இல்லை. 

ஆரம்பகால வரலாற்றில் இந்த வடக்குப் பக்கத்திற்கு பெருமையொன்றுள்ளது. அது தான் கடத்தல். அது தான் உண்மையும் கூட. அந்தக் காலத்தில் இருந்த கடத்தல் பொருட்களுக்குப் பதிலாக தற்போது போதைவஸ்து தான் இங்கு கடத்தப்படுகின்றது.இவ்வாறு போதைப்பொருட்கள் கடத்தப்படுவதை கட்டுப்படுத்த இராணுவத்தினர் இங்கு இருக்க வேண்டும். 

இராணுவத்தினர் பொதுமக்களுக்கு ஏதாவது இடைஞ்சல்களை ஏற்படுத்துக்கின்றார்களா? அல்லது மக்களுக்கு அநியாயம் செய்கின்றனரா? தண்டனை கொடுக்கின்றார்களா? வேதனை கொடுக்கின்றார்களா ? இல்லை சொல்லுங்கள் பார்ப்போம். அதைவிடுத்து அவர்கள் மக்களுக்கு நல்ல சேவைகளைத் தான் மேற்கொள்கின்றனர். அபிவிருத்தித்திட்டங்களைத் தான் முன்னெடுக்கின்றனர். ஆகவே அவர்கள் இருப்பதால் என்ன பிரச்சினை ?

கேள்வி ; யாழ்நகரத்தில் வீதி விபத்துக்கள் அதிகரிக்கின்றன. வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர் நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொண்டுள்ளீர்கள். இதனை எதிர்காலத்தில் கட்டுப்படுத்த எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் ?

பதில் : கடந்த முப்பதுவருட காலயுத்தத்தின் பின் இந்த மக்களுக்கு சமாதானம் கிடைத்ததின் பின்னர் அனைத்தும் சுதந்திரமானது இதனால் ஒரு கட்டுக்கோப்பு இல்லாது போனது. யுத்தகாலத்தில் அநோகமாக துவிச்சக்கர வண்டிகளையே மக்கள் பயன்படுத்தினர். தற்போது மோட்டர் சைக்கிள், மோட்டார் கார் ஆகியவற்றின் பயன்பாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. குறிப்பாக சாரதிகள் வீதி ஒழுங்கு விதிமுறைகளை மீறியே வாகனங்களை செலுத்துகின்றனர். அதற்கு முக்கியமாக வீதிகளில் வாகனத்தை செலுத்துவோர் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். பொலிஸார் மட்டும் இதனை கண்காணித்தால் போதாது வீதிகளில் பயணிப்போர் மற்றும் சாரதிகளுக்கு அக்கறையிருக்க வேண்டும். இதனை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும் என்று நினைக்கின்றேன். மாணவர்கள், இளைஞர்களுக்கு இது தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். குறிப்பாக சாரதி அனுமதிப்பத்திரமில்லாது செல்வது, தலைக் கவசம் அணியாது செல்வது போன்ற காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு அனைத்து மக்களும் இணைந்து கடமையாற்ற வேண்டும். குறிப்பாக பொலிஸாரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகின்றது.

வடக்குப் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையொன்றுள்ளது பெரும்பான்மையின பொலிஸார் தான் இங்கு கடமையாற்றுகின்றனர். தமிழ் பொலிஸார் இங்கு கடமைக்கு வரவேண்டும். அதற்கு இங்குள்ள தமிழ் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தமிழ் மக்கள் பொலிஸாருக்கான வெற்றிடத்திற்கு விண்ணப்பம் அளிக்க முன்வரவில்லை. அரசாங்கத்திற்கு பெரும் எதிர்பார்ப்பொன்றுள்ளது வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்களை பொலிஸில் இணைத்துக்கொள்வதற்கு. ஆனால் எவரும் இதற்கு வருவதில்லை. இதனால் பெரும்பான்மையின பொலிஸாரே கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, தமிழ் பொலிஸார் கடமையிலீடுபடுத்தப்பட்டால் எவ்வளவோ பிரச்சினைகள் கட்டுப்படுத்தப்படும். இங்குள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு பெரும்பான்மையின சிங்களப் பொலிஸார் தான் பாதுகாப்புக் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக நீதிபதி இளஞ்செழியனின் வாழ்க்கையை காப்பற்றியது கூட ஒரு சிங்களப் பொலிஸார் தான். 

இப் பிரதேசத்தில் ஒரு குற்றம் இருந்தால் அல்லது அநியாயம் இருந்தால் அது தமிழ் அநியாயம் அது தமிழ்க் குற்றம். அந்தப் பகுதியில் குற்றங்கள், அநியாயங்கள் இடம்பெற்றால் அது சிங்களக் குற்றம். அவ்வாறு நாம் கருத முடியாது. எங்குபோனாலும் குற்றம் இருக்கத்தான் செய்யும் அதேவேளை தவறு இருக்கத்தான் செய்யும். இது இயற்கை. தமிழ் அரசியல்வாதிகள் ஏதாவது தெரிவித்தால் அங்குள்ள பெரும்பான்மையின அரசியல் தலைவர்கள் ஏதாவது எதிர்மறையான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அதை விடுத்த அனைத்து அரசியல்வாதிகளும் பாகப்பிரிவினையை விடுத்து மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.

கேள்வி : வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் இங்கு வாழும் மக்களுக்கு நல்லிணக்கம் தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள் ?

பதில் :மிக முக்கியமான காரணம் தான் . மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் பாடசாலை அமைத்தல், வீட்டுத்திட்டம், பாலங்கள் அமைத்தல், வீதி நிர்மாணம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு தமிழ் மக்களை தங்கள் மனதில் இருத்தி அவர்களின் மனதை வெற்றிகொள்ள முடியாது போனது. ஆனால் வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். தமிழ் மக்களின் மனதை வெற்றிகொள்வது தான் முக்கியம். 

மக்களின் மனங்களை வெற்றிகொள்ள என் செய்யவேண்டும். பணம் முக்கியமல்ல. அதனை வெற்றிகொள்ள மனிதத்தன்மை, கருணை, ஆதரவு, நட்புறபு, அன்பு ஆகியவைதான் முக்கியம். அவற்றைத் தான் தெற்கில் இருந்து வடக்கு பக்கத்திற்கு கொண்டு வரவேண்டும். சமமான நிலை, அனைவருக்கும் ஒரே மாதிரியான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இன, மதம், மொழி பேதமின்றி அதற்கும் மேல் மனிதத்தன்மையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான மனநிலை இருந்தால் இந்த நல்லிணக்கத்தை அழகான முறையில் முன்னெடுக்க முடியுமென நான் நினைக்கின்றேன்.

உதாரணத்திற்கு கிளிநொச்சி பிரதேசத்தில் ரத்னபிரிய என்ற இராணுவவீரரொருவர் இருந்தார். அவர் அங்கிருந்து வெளியேறும் போது அங்கிருந்த தமிழ் மக்கள் மற்றும் இளைஞர்கள் அழுகின்றனர். அதுமட்டுமல்ல அந்த மக்கள் இரண்டு, மூன்று தடவைகள் என்னிடம் வந்து குறித்த இராணுவ வீரரை அனுப்ப வேண்டாமென தெரிவித்தனர். இவ்வாறு செய்தமை எதற்கு அங்கு சிங்களம், தமிழ் என்ற வேறுபாடு இருக்கவில்லை. எல்லோரும் மனிதர்கள் என்ற நோக்கத்திலேயே இவ்வாறு இடம்பெற்றது. எல்லோரும் மனித்தன்மையுடன் இருந்தனர். 

நான் ஒரு இனவாத அரசியல்வாதியல்ல. ஆரம்பகாலத்திலிருந்தே நான் இனவாத அரசியலில் ஈடுபட்டது கிடையாது. ஜே.ஆர். ஜெயவர்தன இருந்த காலம் முதல் எதிர்க்கட்சியில் இருந்து மாநகர சபைகளை உருவாக்குவதற்கு விஜயகுமாரதுங்கவுடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன். நான் வடமாகாணத்தில் கடமையாற்றினாலும் நான் அவ்வாறே இனவாதமற்ற முறையில் தான் கடமையாற்றுகின்றேன். தமிழ் மக்கள் என்னுடன் அன்பாக பழகுகின்றனர். நானும் அவர்களுடன் அன்பாகப் பழகுகின்றேன். நான் நினைத்துள்ளேன் நான் இறந்தால் எனது உடலை இந்த இடத்தில் தான் அடக்கம்பண்ண வேண்டுமென. அந்தளவுக்கு தமிழ் மக்களின் ஆதரவும் அன்பும் எனக்கு புரிந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது. ஏனைய அரசியல்வாதிகளும் இவ்வாறு இருக்க வேண்டும். அதனை அவர்களால் செய்யமுடியும். 

( நேர்காணல் வீ.பிரியதர்சன் )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04