(நா.தனுஜா)

சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவதுடன், ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் தயாராக உள்ளதாக அமெரிக்க இராஜதந்திரி தெரிவித்துள்ளார். 

சட்டவிரோத ஆட்கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு கொழும்பிலுள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமெரிக்கத் தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான இராஜதந்திரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"ஆட்கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை அரசாங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராக உள்ளோம். ஆட்கடத்தல் விவகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை இலங்கைக்கு ஒதுக்கியுள்ளது. ஆட்கடத்தல் விவகாரங்களை விசாரணை செய்வதற்கான சட்ட முறைமைகளை வலுப்படுத்தல், ஆட்கடத்தல் தொடர்பால வினைத்திறனான தகவல் சேகரிப்பு முறையினை விருத்தி செய்தல் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான பாதுகாப்பு முறைமைகளை ஸ்திரமாக்கல் போன் றவற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் மூலம் மேற்கொள்ள முடியும். 

இலங்கை அரசாங்கம் ஆட்கடத்தலை தடுப்பதற்காக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆட்கடத்தலுக்கு உட்படும் நபர்களை இனங்காணல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஆதாரங்களை சேகரித்தல் என்பவற்றையும் அரசாங்கம் மேற்கொள்கின்றது. 

எனவே இவ்விடயத்தில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, ஆட்கடத்தலைத் தடுப்பதற்கான தேசிய படையணிக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஆட்கடத்தல் தொடர்பான சவாலை இலங்கை தனித்து எதிர்கொள்ள வேண்டியதில்லை. இப்பிரச்சினை அமெரிக்காவிற்கும் பாரிய சவாலாகவே உள்ளது. எனவே இவ்விடயத்தில் இலங்கைக்கு சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கத் தயாராக உள்ளோம்" என்றார்.