பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.

பொலன்னறுவை மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தியின் அனுகூலங்களை பெற்றுக் கொடுப்பதற்காக ஜனாதிபதி வழிகாட்டுதலில் நடைமுறைப்படுத்தப்படும் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 80.6 மில்லியன் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் பொலன்னறுவை றோயல் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் விளையாட்டினை நகரத்திலிருந்து கிராமத்திற்கு கொண்டுசெல்லும் முயற்சியில் முதற்படியாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானம், நகர பிரதேசங்களில் வாழும் சிறார்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள கிரிக்கெட் விளையாட்டினை கிராமப் புற சிறுவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக பெற்றுக்கொடுக்கும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும்.

கடந்த காலத்தில் றோயல் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தியதுடன், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கிரிக்கெட் வீர்ர்களை உருவாக்கும் களமாக இந்த விளையாட்டு மைதானம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வித்தியாலயத்திற்கு வருகைத்தந்த ஜனாதிபதியை மாணவர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றதுடன், தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பு மரியாதையும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

செவனபிட்டிய மகா வித்தியாலயம் உள்ளிட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் 04 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணத்தொகுதிகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கிவைத்தார்.

றோயல் கல்லூரி மாணவர்களால் ஜனாதிபதிக்கு விசேட நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

வடமத்திய மாகாண ஆளுநர் எம்.பீ. ஜயசிங்க, பிரதி அமைச்சர்கள் அஜித் மான்னம்பெரும, திலங்க சுமதிபால மற்றும் அதிபர் ஐ.கே.கே. ரவிலால் விஜேவங்ஷ, பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதனிடையே பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உடற்பயிற்சிக்கான நடைபாதையும் இன்று காலை ஜனாதிபதியினால் மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

நாட்டின் எதிர்கால சுபீட்சம் மற்றும் நிலையான தன்மையை நோக்காகக் கொண்டு ஆரோக்கியமான மக்கள் சமுதாயத்தை உருவாக்கும் உன்னத நோக்கில் எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 5.52 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

உடற்பயிற்சிக்கான நடைபாதையை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி வருகைத்தந்திருந்த மக்களுடன் சுமூக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.