முல்லைத்தீவில் சட்டவிரோத மீன் பிடித் தொழிலை உடனடியாக நிறுத்துமாறு கோரி மீனவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு இன்று காலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

முல்லைத்தீவு சுனாமி நினைவாலயம் முன்னால் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு பொது சந்தை வழியாக நகரை அடைந்து அங்கிருந்து மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினை சென்றடைந்தது.

நீரியல் வள திணைக்கத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள் சட்டவிரோத மீன் பிடியை தடைசெய்யுமாறு கோரி கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு நீரியல் வள திணைக்கள உதவிப்பணிப்பாளர் தம்மை சந்திக்க வேண்டும் என நீண்ட நேரமாக திணைக்களத்தின் முன்னால் கோஷங்களை எழுப்பியவாறு காத்திருந்தனர்.

நீண்ட நேரமாக காத்திருந்தும் உதவி பணிப்பாளரோ அல்லது ஏனைய திணைக்கள அதிகாரிகளோ தங்களை வந்து சந்திக்காமையினால் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் தடைகளையும் மீறி வேலிகளை உடைத்து திணைக்களத்தினுள் புகுந்து தாக்குல் நடத்தினர்.

தாக்கதலில் திணைக்கள ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியதோடு சுற்று வேலியும் முற்றாக உடைந்தது.

இதனைத் தொடர்ந்து அதிகளவிலான கலகம் அடக்கும் பொலிஸார் திணைக்களத்தை சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்த ராசா, மாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் நீரியல் வள அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் திணைக்களத்தின் முன்னால் பந்தல் அமைத்து தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகளுக்கு,

முல்லைத்தீவில் பதற்றம் ! கடற்தொழில் நீரியல் வள திணக்களம் முற்றுகை