புதிய பிரதமராக பதிவியேற்கவுள்ள இம்ரான்கானின் பதவியேற்பு விழாவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைப்பது தொடர்பிலான ஆலோசனையில் பாகிஸ்தானின் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது. 

இந்நிலையில் எதிர்வரும் 11 ஆம் திகதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் தற்போது  சீனா மற்றும் துருக்கி நாட்டு ஜனாதிபதிகள் வருகை தருவது உறுதியாகிவிட்டது.

 மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை போல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். 

இதனால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவரான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், கபில் தேவ் மற்றும் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது. திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது.