ஆப்கானிஸ்தானில் 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்து வரும் உள்நாட்டு போரை பயன்படுத்தி ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் அங்கு கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். ஆனால் அவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல்கள் நடந்து வந்தது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜோஸ்ஜான் மாகாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல்கள் நடந்து வந்தது.

மற்றொரு பக்கம் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகளிடம் இருந்தும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு அழுத்தம் வந்தது. இந் நிலையில் அங்கு 150க்கும் மேற்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளிடம் சரண் அடைந்துள்ளனர்.

இதுபற்றி வட பகுதி இராணுவ தளபதி முகமது ஹனிப் ரெஸாயீ கூறும்போது,

“கடந்த காலத்திலும் இப்படி ஐ.எஸ் தீவிரவாதிகள்கள் சரண் அடைந்தது உண்டு. ஆனால் இந்த முறை அதன் தலைவர்களில் ஒருவரும், துணைத்தலைவரும் 150க்கும் மேற்பட்டோருடன் சரண் அடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது” என்றார்.

இதன்மூலம் வட பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதாகவும் தெரிவித்தள்ளார்.