(எம்.சி.நஜிமுதீன்)

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி இன்று கொழும்பில் பாரிய மக்கள் எழுச்சிப் பேரணியொன்றை நடத்தவுள்ளது. இப்பேரணி மூலமான மக்கள் அழுத்தத்தைக்கண்டு நல்லாட்சி அரசாங்கம் ஸ்தம்பிதமடையும் என கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்தாது காலம் கடத்துகின்றமை, தேசிய சொத்துக்களை விற்பனை செய்தல், புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட காரணிகளை  அடிப்படையாகக் கொண்டே கூட்டு எதிர்க்கட்சி குறித்த அரசாங்க எதிர்ப்பு மக்கள் எழுச்சி பேரணியை நடத்துகிறது.

இப்பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட கட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் கொழும்பை வந்தடையும் கூட்டு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் லிப்டன் சுற்றுவட்டத்திற்கருகில் இன்று பி.ப.இரண்டு மணியளவில் கூடவுள்ளனர்.பின்னர்  பி.ப 2.30 மணியளவில் பேரணியை ஆரம்பித்து விஹாரமகாதேவி பூங்காவரை செல்லவுள்ளனர். அத்துடன் விஹாரமகாதேவி பூங்கா உள்ளக அரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது.     

 நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி நாடு தழுவிய ரீதியில் இருநூறுக்கும் மேற்பட்ட பேரணிகளை நடத்துவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது. அதன் ஒரு பேரணியாகவே இன்றைய பேரணி நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.