இலங்கையின் அணியின் அசமந்தப் போக்கின் காரணமாகவும் மோசமான களத் தடுப்புக் காரணமாகவும் தென்னாபிரிக்க அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது. 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் இரண்டாவது போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில்  இன்று ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களினை இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 111 பந்துகளுக்கு 79 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 78 பந்துகளுக்கு 69 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

245 என்ற வெற்றி இலக்கினை நோக்கி களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் டீகொக் மற்றும் அம்லா ஜோடி உறுதியான ஒரு அஸ்த்திபாரத்தை அணிக்காக இட்டது. அதனூடன் இலங்கை அணியின் மோசமான களத் தடுப்பும் இரண்டு பிடி நழுவல்களும் தென்னாபிரிக்க அணியின் ஓட்ட அதிகரிப்புக்கு மேலும் வலுச் சேர்த்தது. 

ஒரு கட்டத்தில் 14 ஓவர்களை எதிர்கொண்ட இந்த ஜோடி 91 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது அகில தனஞ்சயவின் பந்து வீச்சினால் ஹஸீம் அம்லா 43 பந்துகளுக்கு 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டபோது ஆட்டமிழந்து வெளியேற 14.2 ஓவரில் இவருக்கு பக்க பலமாக துடுப்பெடுத்தாடிய டீகொக் 43 பந்துகளை எதிர்கொண்டு அரை சதம் விளாச 15 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஐ கடந்தது. 

ஹஸீம் அம்லாவின் ஆட்டமிழப்பினையடுத்து களமிறங்கிய மர்க்ரம் வெகு நேரம் தாக்கு பிடிக்காமல் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் மூன்று ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமிறங்கிய அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியும் டீகொக்குமாக இணைந்து 53 ஓட்டங்களை பெற்றுக் கொண்டிருந்த வேளை டீகொக் 87 ஓட்டங்களுடன் ராஜிதவின் பந்து வீச்சில் லக்மலிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இவரையடுத்து சிறப்பாக ஆடி வந்த டூப்பிளஸ்ஸி மூன்று ஆறு ஓட்டங்கள் மூன்று நான்கு ஓட்டங்கள் அடங்களாக 41 பந்துகளுக்கு 49 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை அகில தனஞ்சயவின் பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்து அரைசதம் அடிப்பதற்கான வாய்ப்பினை நழுவ விட்டார். 

அவரைத் தொடர்ந்து களம்புகுந்த மில்லருடம் மூன்று ஓட்டங்களுடன் சுரங்க லக்மலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் 33 ஆவது ஒவரின் போது தென்னாபிரிக்க அணி  ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 

இறுதியாக இங்கிலாந்து அணி 42.5 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்று இலங்கை அணி நிர்ணயித்த வெற்றி இலக்கினை கடந்தது.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் அகில தனஞ்சய 60 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால், கசூன் ராஜித மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள். போட்டியின் ஆட்ட நாயகனாக தென்னாபிரிக்க அணியின் டீகொக் தெரிவானார்.

இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் தென்னாபிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

இவ் இரு அணிகளுக்குமான மூன்றாவது போட்டி எதிர்வரும் 03 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்தில் காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.