(எம்.சி.நஜிமுதீன்)

கூட்டு எதிரணியிருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்காப்படாவிட்டால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பொரளை என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்றம் தற்போது திரிவுபட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அது நாட்டில் பல்வேறு வகையில் தாக்கம் செலுத்துகிறது. 225 பாராளுன்ற உறுப்பினர்களில் ஒருவர் சபாநாயகர். எனவே எஞ்சிய 224 பேரில் நாம் 54 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரின் அனுமதியுடன் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தோம். அத்துடன் எதிர்க்ட்சியின் செயற்பாடுகளை நாம் உரிய முறையில் மேற்கொண்டோம். எனவே கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலமை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

அதைவிடுத்து நாம் மூன்றரை வருடங்கள் எதிர்க் கட்சியகாகச் செயற்பட்ட பின்னரும் சபாநாயர் எங்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியின் தரப்பு எனவும், ஆகையால் எதிர்கட்சித் தலைமை வழங்க முடியாதெனவும் குறிப்பிட முடியாது. 

சபாநாயகர் பக்கச்சார்பின்றி செயற்படுவாராயின் எதிர்கட்சித் தலமையை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும். கடந்த மூன்றரை வருடங்களாக சபாநாயகர் பக்கச்சார்பாகவே நடந்துகொண்டுள்ளார். எனவே எதிர்காலத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்தும் அவதானம் செலுத்தவுள்ளோம்.